இந்தியாவின் நேர்மையான கட்சி ஆம் ஆத்மி என்ற சான்றிதழை பிரதமர் மோடி வழங்கியுள்ளார்... அரவிந்த் கெஜ்ரிவால்

 
மோடி

சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் மிகவும் நேர்மையான கட்சி ஆம் ஆத்மி என்ற சான்றிதழை பிரதமர் மோடி வழங்கியுள்ளார் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

கோவாவில் பானாஜியில் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் மிகவும் நேர்மையான கட்சி ஆம் ஆத்மி என்ற சான்றிதழை பிரதமர் மோடி வழங்கியுள்ளார். மோடி ஜி, சி.பி.ஐ.யை கட்டவிழ்த்து விட்டார். என் மீது போலீஸ் ரெய்டு, மணிஷ் சிசோடியா, 21 எம்.எல்.ஏ.க்களை கைது செய்தார். 400 கோப்புகளை ஆய்வு செய்ய கமிஷன் அமைத்தார், எதுவும் கிடைக்கவில்லை, எங்களது டி.என்.ஏ.வில் ஊழலற்ற நிர்வாகம் உள்ளது.

ஆம் ஆத்மி

பொதுப் பிரச்சினைகளுக்காக ஆம் ஆத்மி போட்டியிடுகிறது. இலவச பிஜிலி போன்றவற்றுக்கு நாங்கள் உத்தரவாதம் தருவது போல், காங்கிரஸூம் உத்தரவாதம் அளிக்கிறது. காங்கிரஸூக்கு போடும் ஒவ்வொரு வாக்கும் பா.ஜ.க.வுக்கு செல்லும். எந்த கோவானும் காங்கிரஸூக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?. அவர்களின் 17 எம்.எல்.ஏ.க்களில் 15 பேர் விற்கப்பட்டனர்.

அரவிந்த் கெஜ்ரிவால்

கோவா தேர்தலுக்கு பிறகு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லையென்றால், பா.ஜ.க. அல்லாத கட்சியுடன் கூட்டணி அமைப்பது பற்றி யோசிக்கலாம். ஆனால் அதற்கான தேவை வராது என நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 2 தினங்களாக கோவாவில் வீடு வீடாக சென்று ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்தார்.