இலவசத்துக்கு நிதி எங்கே இருந்தும் வரும்.. சித்து - மணல் திருட்டை தடுத்தால் வரும்.. அரவிந்த் கெஜ்ரிவால்

 
நவ்ஜோத் சிங் சித்து

தேர்தல் வாக்குறுதி தொடர்பாக காங்கிரசின் நவ்ஜோத் சிங் சித்துவும், ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவாலும் டிவிட்டரில் வார்த்தை போரில் ஈடுபட்டனர்.

பஞ்சாபில் தற்போது முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. பஞ்சாப் சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களை உள்ளதால் அங்கு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. நேற்று தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக காங்கிரசின் சித்துவும், ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவாலும் வார்த்தை போரில் ஈடுபட்டனர்.

சரண்ஜித் சிங் சன்னி

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து டிவிட்டரில், பஞ்சாபியர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் ஜியை தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள், நீங்கள் தினமும் அறிவிக்கும் இலவசங்களுக்கு எப்படி நிதி கொடுப்பீர்கள்? வாக்குறுதிகளுககு அடிப்படை பொருளாதார ஆதரவை வழங்க முடியாவிட்டால் மக்களை முட்டாளாக்குவதை நிறுத்துங்கள். பஞ்சாபியர்கள் வருமானத்துக்கு (உழைத்து வருமானம் ஈட்டுதல்) தகுதியானவர்கள்,  பிச்சைக்கு அல்ல. பஞ்சாப் மாடல் அனைத்து பஞ்சாபியர்களுக்கும் வருமானம் மற்றும் வாய்ப்புகளை வழங்குவதற்கான முன்மாதிரியாகும் என்று பதிவு செய்து இருந்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

நவ்ஜோத் சிங் சித்துவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் உடனடியாக பதில் கொடுத்தார். அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில், உங்கள் முதல்வர் வெளிச்சத்தில் செய்தித்தாள், டிவிக்காரர்கள் மணல் திருட்டை பிடித்திருக்கிறார்கள். மணல் மாபியாவுடன் முதல்வருக்கு தொடர்பு இருப்பதாக சொல்கிறார்கள். முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. பாதல் ஜி மற்றும் கேப்டன் சாஹிப் இருவரும் இது குறித்து மவுனமாக உள்ளனர். நீங்களும் அமைதியாக இருக்கிறீர்கள். ஏன்?. முதல்வர் முதல் அடிமட்டம் வரை மணல் திருடப்படுகிறது. மணல் திருட்டை தடுத்தால் ரூ.20 ஆயிரம் கோடி ரூபாய் வரும் என்று பதிவு செய்துள்ளார்.