"காந்தி படுகொலைக்கும் ஆர்எஸ்எஸ்க்கும் சம்பந்தமில்லை" - ஒரே போடாக போட்ட அர்ஜுன் சம்பத்!

மகாத்மா காந்தியின் நினைவுதினத்தில் கோயம்புத்தூரில் அரங்கேறியிருக்கும் செயல் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காந்தியின் நினைவுநாளையொட்டி கோவையில் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் உறுதியேற்பு நிகழ்வ நடைபெற்றது. "மத வெறிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்ட உறுதி ஏற்போம்" என்ற தலைப்பின் கீழ் உறுதிமொழிகளை ராமகிருஷ்ணன் வாசித்தார். மற்றவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
அவ்வாறாக அவர், "சாதி மத வெறுப்பு அரசியலை விதைத்து மக்களிடையே மதவெறியை உருவாக்கிட துணியும் கோட்சேவின் வாரிசுகளால், ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகளால் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்” என்றார். உடனே அங்கு வந்த போலீஸ் அதிகாரிகள் ஆர்எஸ்எஸ் குறித்தும் கோட்சே குறித்தும் ஏன் பேசுகிறீர்கள் எனக்கூறி மைக்கை பிடுங்க முற்பட்டார்கள். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ட்விட்டரில் கோட்சேவின் வாரிசுகள் என முதலமைச்சர் ஸ்டாலினும் தான் சொல்லியிருக்கிறார்.
அவரை கேள்வி கேட்க அதிகாரிகளுக்கு துணிவிருக்கிறதா என கேள்வியெழுப்பி வருகின்றனர். இச்சூழலில் இதுகுறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவையில் காந்தி நினைவு தின உறுதிமொழியேற்பில் கோட்சே பெயரையும் இந்து மதவெறி என்ற வார்த்தையும் பயன்படுத்த காவல் துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு சிபிஎம், தபெதிக, வி.சி உள்ளிட்ட இடதுசாரி அமைப்பினர் காவல் துறையினருடன் வாக்குவாதம் செய்துள்ளனர்.
ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் காந்தி படுகொலைக்கும் தொடர்பு இல்லை என்பது ஊரறிந்த உண்மை. ராகுல் இப்படி அவதூறு பிரச்சாரம் செய்த காரணத்தினால் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார். இன்று கோவையில் ஆர்எஸ்எஸ் குறித்தும் இந்து உணர்வாளர்கள் குறித்தும் வெறுப்பு பிரச்சாரம் செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும். இது குறித்து கோரிக்கை புகார் மனு சமர்ப்பிக்கப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.