"செங்கோட்டையன் அல்லது வேலுமணியை முதல்வர் ஆக்குவதே பாஜக திட்டம்" - அன்வர் ராஜா
2026 தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஈ.பி.எஸ்.-க்கு முதல்வர் வாய்ப்பில்லை என அன்வர் ராஜா கூறியுள்ளார்.

அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம் பியுமான அன்வர் ராஜா, ஆரம்பத்தில் இருந்தே அதிமுக - பாஜக கூட்டணியால் அதிருப்தியில் இருந்து வருகிறார். ராமநாதபுரத்தை சேர்ந்த அன்வர் ராஜா அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தார். ஏற்கனவே பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருந்த போதும் அக்காட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்த அன்வர் ராஜா, சி ஏ ஏ சட்ட திருத்தத்திற்கு அதிமுக ஆதரவு அளித்தபோதும், நாடாளுமன்றத்தில் எதிர்த்து பேசி இருந்தார். இந்த நிலையில், அண்மையில் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, திமுகவில் இணைந்தார்.
இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அன்வர் ராஜா, “2026 தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஈ.பி.எஸ்.-க்கு முதல்வர் வாய்ப்பில்லை. செங்கோட்டையன் அல்லது வேலுமணிக்கு முதல்வர் வாய்ப்பு இருக்கலாம். பாஜக கூட்டணி முதல்வராக, பா.ஜ.க சொல்வதை அப்படியே கேட்கும் ஒருவராகவே இருக்க முடியும். அதிமுகவில் இருந்து ஒருவர் முதல்வர் என்கிறார் அமித்ஷா...ஈபிஎஸ் பெயரை சொல்லவில்லை. முதல்வர் யார்? என்பதை அதிமுக தான் முடிவு செய்ய வேண்டும்...பா.ஜ.க அல்ல” என்றார்.


