"விட மாட்டோம்.. அனிதாவுக்கு ஒரு நியாயம் லாவண்யாவுக்கு ஒரு நியாயமா" - அண்ணாமலை சூளுரை!
அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம் பல்வேறு திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. தேவையில்லாமல் விவகாரத்தைக் கையிலெடுத்து விழித்துக் கொண்டிருக்கிறது பாஜக. தையா தக்கா என குதித்த பாஜக தலைவர்கள் பலரும் ஜகா வாங்கி கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ட்விட்டர் டிபி மாற்றப்பட்டதிலேயே இது விளங்கிவிட்டது. இதற்கெல்லாம் காரணம் அந்த மாணவி பேசிய முழு வீடியோ தான். அந்தப் புதிய வீடியோவில் மதமாற்றம் குறித்து எந்தவொரு விஷயத்தையும் மாணவி பேசவில்லை. மாறாக அப்படி ஒரு விஷயமே நடக்கவில்லை என்கிறார் அந்த மாணவி.
இதனால் தமிழக பாஜக ஒரு விஷயத்தை பொய்யாக சித்தரித்து மதக் கலவரம் ஏற்படும்படியாக பிரச்சாரம் செய்தது அம்பலமாகிப் போனதாக திமுக, விசிக, கம்யுனிஸ்ட் கட்சிகள் விமர்சித்துள்ளனர். மைக்கேல்பட்டி மக்களும் பாஜகவினர் வந்து மதமாற்றம் குறித்து பேசுமாறு மிரட்டல் விடுப்பதாகக் குற்றஞ்சாட்டினர். இச்சூழலில் இந்த டேமேஜை ஈடுசெய்யும் விதமாக இன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசிய செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், தேசிய மகளிரணி தலைவியும் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், மாவட்ட தலைவர் அய்யப்பன் ஆகியோர் மாணவியின் வீட்டுக்குச் சென்றனர்.
மேலும் அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறி, பாஜக சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர். இதற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "மாணவியின் தற்கொலைக்கு நீதி கிடைக்கும் வரை பாஜக போராடும். இந்த போராட்டம் எந்த மதத்திற்க்கு எதிரான போராட்டம் இல்லை. சகோதரி லாவண்யாவிற்கு நீதி கேட்கும் போராட்டம். இதில் ஒரு மதத்தைச் சேர்ந்த இருவர் தவறு செய்துள்ளனர். இதற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். மாணவியின் வீடியோவை அடிப்படையாக வைத்து பாஜக குரல் கொடுத்து வருகிறது.
வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து பாஜக போராடுகிறது. அனிதாவை வைத்து அரசியல் செய்தது போல் நாங்கள் செய்யவில்லை. அனிதாவிற்கு ஒரு நியாயம் லாவண்யாவிற்கு ஒரு நியாயமா? ஆட்சியாளர்கள் பொறுப்பில் இருப்பவர்கள் பொறுப்பில்லாமல் பேசுவதால் நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் வந்துள்ளது. இறக்கும் தருவாயில் எந்த ஒரு குழந்தையும் பொய் சொல்லாது. இதில், புலனாய்வுத் துறை தவறான அறிக்கையை முதலமைச்சருக்கு தெரிவித்துள்ளனர். தமிழக அரசு மோசமாக கையாண்டுள்ளனர். அற்புதமான காவல் துறைக்கு கலங்கம் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை சுதந்திரமாக செயல்படவிடுங்கள்” என்றார்.