அடடே அண்ணாமலையா இது?.. நயினாரை கழட்டிவிட்டு மீட்டிங் - அதிமுகவை புகழ்ந்து பேட்டி!

 
அண்ணாமலை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் இப்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. வழக்கம்போல அதிமுக, திமுக இரு அணிகளுக்கே கடும் போட்டி நிலவுகிறது. அதேபோல அதிமுக முகாம் பரபரப்புடனே காணப்படுகிறது. காரணம் பாஜகவுடனான சமீபத்திய பிணக்கு. பாஜக சட்டப்பேரவை தலைவர் நயினார் நாகேந்திரன், "சட்டப்பேரவையில் பேசுமளவுக்கு அதிமுக உறுப்பினர்களிடையே ஆண்மை இல்லை" என்று பேசியிருந்தார். இதற்கு அதிமுக தலைவர்களும் தொண்டர்களும் கொந்தளித்தனர். 

மேலிட அழுத்தம் காரணமாக தான் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக நயினார் ட்விட் போட்டார். அதேபோல நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்நோக்கி அவர் இப்படி கூறியது கூட்டணி ரெண்டுபடவும் ஒரு காரணாமாக அமைந்துவிட்டது. உடனே தலையிட்ட பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, எடப்பாடியிடம் போனில் அழைத்து வருத்தம் தெரிவித்தார். இதற்குப் பின் கூட்டணி வழக்கம் போல பழைய டிராக்குக்கு சென்றது. தற்போது கூட்டணிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. 

உள்ளடி வேலை ஆரம்பம்..! ராமநாதபுரத்தில் கரை சேர்வாரா நயினார் நாகேந்திரன்..!

அந்த வகையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இட பங்கீடு தொடர்பாக அதிமுக-பாஜக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த மீட்டிங்கில் நயினாரை விடுத்து மற்ற தலைவர்களை அண்ணாமலை அழைத்துச் சென்றிருக்கிறார். சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. குமரி, கோவையில் அதிகப்படியான இடம் கேட்டு பாஜக நெருக்கடி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அதிமுக தரப்பு விட்டுக்கொடுப்பதாய் இல்லை. 

Image

அதேபோல நயினார் விவகாரமும் பேசப்பட்டிருக்கிறது. ஒருவேளை பாஜக கேட்கும் இடங்களைக் கொடுத்துவிட்டால், நயினார் இப்படி பேசியும் நீங்கள் இவ்வளவு சீட்டுகளை ஒதுக்கலாமா என தொண்டர்கள் கேள்வி கேட்பார்கள் என அதிமுக தலைமை சொல்லியிருக்கிறது. இந்த நிலைமையை மாற்றுவதற்கு எதாவது செய்யுங்கள் என கேட்க அது அண்ணாமலையின் பேட்டியில் எதிரொலித்துள்ளது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "வலுவான ஒரு எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுகிறது.  

Image


திமுக அரசு செய்கின்ற அனைத்து தவறுகளையும் அதிமுக மக்கள் மன்றத்தில் எழுப்புகிறது. அதன் மூலமாக திமுக தன்னை திருத்திக் கொள்கிறது ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுகிறது. முதற்கட்ட பேச்சுவார்த்தையை முடித்திருக்கிறோம். இன்னும் பேச்சுவார்த்தையை தொடருவோம். பின்னடைவு, சிக்கல் போன்றவை எதுவும் கிடையாது” என்று பேசியிருக்கிறார். இதே அண்ணாமலை தான் தமிழ்நாட்டில் அதிமுக இல்லை நாங்கள் தான் எதிர்க்கட்சி என பல பேட்டிகளில் பேசி வந்துள்ளார். இன்று திடீர் மாற்றமாக அதிமுக தான் எதிர்க்கட்சி என புகழ்ந்து பேசியுள்ளார்.