“பாஜக கூட்டணியில் இருந்து விலக தயார்”- பாமகவின் கருத்துக்கு அண்ணாமலை ரியாக்ஷன்
எல்லா சமுதாயத்திற்கும் நியாயம் வேண்டுமென பாஜக நினைக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு அளித்தால் தேர்தலில் திமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்போம், அப்படி கொடுக்கவில்லை என்றால் வீடு வீடாக சென்று ஸ்டாலின், வன்னியர்களுக்கு விரோதி என பிரச்சாரம் செய்வோம் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார். இதேபோல் பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி, “நாளையே பாரதிய ஜனதா கூட்டணியிலிருந்து வெளிவருகிறோம். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கூறியதைப் போல திமுகவுக்கு நிபந்தனை இல்லாத ஆதரவு வழங்குகிறோம். அப்படி செய்தால் வரும் 6-ஆம் தேதி தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை திமுக அரசு நிறைவேற்றுமா? இப்போது உள்ளத் தடைகள் அனைத்தும் பாஜக அணியிலிருந்து பாமக வெளியேறினால் உடனடியாக விலகி விடுமா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “மருத்துவர் ராமதாஸ் அவர்களும் சரி அண்ணன் அன்புமணி அவர்களும் சரி ஒரு கொள்கையை வைத்திருக்கிறார்கள். எல்லா கட்சிக்கும் அந்த கொள்கையை அடைய விருப்பம் இருக்கும். வன்னியர்களுக்கான 15% இட ஒதுக்கீடு கொடுத்தால் நாங்கள் 2026 தேர்தலிலே போட்டியிடவில்லை என்று சொல்கிறார்கள். அவர்களின் கொள்கையை அவர்கள் பிரகடனம் செய்கிறார்கள்.. காரணம் அவர்களின் அரசியல் பயணத்தில் உச்சபட்ச விஷயமாக இதை பார்க்கிறார்கள்.. விகிதாச்சார அடிப்படையில் எல்லா சமுதாய மக்களுக்கும் கொடுக்க வேண்டும் என்பது எங்கள் வேண்டுகோள். எல்லா சமுதாயத்திற்கும் நியாயம் வேண்டுமென பாஜக நினைக்கிறது. பாமக கட்சிக்கு ஒரு கொள்கை இருக்கு அதை அடைய வேண்டும் என்பது தான் அவரவர்களின் இலக்காக இருக்கும்” என்றார்.