மொல்லமாறி.. அண்ணாமலை ஒரு 420 என்பதற்கு வலு சேர்க்கிறார் - திமுக கடும் தாக்கு
திமுகவினரின் சொத்து பட்டியலோடு தனது ரபேல் வாட்ச்க்கான பில்லையும் வெளியிட்டார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிடப் போகிறேன் என்று சொல்லி வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சொன்னபடியே ஏப்ரல் 14ஆம் தேதியான நேற்று திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். யார் யாருக்கு எவ்வளவு கோடி சொத்து உள்ளது என்று ஒரு வீடியோவாக தயாரித்து வெளியிட்டுள்ளார். திமுக பைல்ஸ் என்கிற பெயரில் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் திமுக அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு , பொன்முடி, எ.வ. வேலு , அன்பில் மகேஷ், முதல்வர் மு. க. ஸ்டாலின், திமுக எம்பிக்கள் ஜெகத்ரட்சகன், கனிமொழி, முதல்வர் மருமகன் சபரீசன் , கலாநிதி மாறன் உள்ளிட்டோரின் சொத்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமாக திமுகவின் சொத்து மதிப்பு 1.34 லட்சம் கோடி என்று அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வீடியோவில் பினாமிகள் மற்றும் கருப்பு பணம் உள்ளிட்டவை அடங்கவில்லை. அது குறித்த பட்டியல் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார் அண்ணாமலை . அதேபோல் இந்த வீடியோவின் அடுத்த பாகம் விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார் .
இதுகுறித்து கடுமையாக விமர்சித்துள்ளது திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் முரசொலி. இந்த நாளிதழில் சின்னத்தம்பி பெரியதம்பி என்கிற பகுதியில், ‘’என்ன ரபேல் வாட்சை மூன்றரை லட்சம் கொடுத்து நண்பரிடம் இருந்து வாங்கினேன் என அண்ணாமலை கூறி, நண்பர் வாங்கிய பில் என்ற பெயரில் ஒரு பேப்பரைக் காட்டியுள்ளார்’’ என்று சின்னத்தம்பி கேட்க ,
’’ஆமாம் தம்பி . அண்ணாமலை ஒரு 420 என்று பிஜேபியில் இருந்து விலகிய அந்தக் கட்சியின் தொழில்நுட்ப அணியின் செயலாளர் கூறியது எத்தனை சரியான மதிப்பீடு என்பதற்கு மேலும் வலு சேர்த்துள்ளார் அண்ணாமலை அவரது வாட்ச் நண்பர் தந்தது, அவருக்கு வீட்டு வாடகை நண்பர் செலுத்துகிறார் . பெட்ரோல் மற்றும் ஊழியர்கள் ஊதியம் எல்லாமே நண்பர்கள் செலுத்துகிறார்கள் என்று பேட்டி தந்துள்ளது அவர் எத்தகைய மொல்லமாறி என்பதை சுட்டிக்காட்ட வில்லையா தான் பெற்ற ஐபிஎஸ் பட்டம் கூட தனக்காக நண்பர் எழுதி பெற்றது என்று கூறாமல் விட்டாரே!’’என்கிறார் பெரியதம்பி.