திருப்பதி விமான நிலையத்துக்குள் அனுமதிக்க மறுத்த அதிகாரி.. குடிநீர் சப்ளையை கட் பண்ணிய எம்.எல்.ஏ. மகன்

 
அபிநயா ரெட்டி

திருப்பதி ரேனிகுண்டா விமான நிலையத்துக்குள் தன்னை அனுமதிக்க விமான நிலைய அதிகாரி மறுத்ததால், விமான நிலையம் மற்றும் பணியாளர்கள் குடியிருப்புகளுக்கான தண்ணீர் சப்ளையை எம்.எல்.ஏ. மகன் கட் பண்ணியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆந்திர மாநில எம்.எல்.ஏ. கருணாகர் ரெட்டியின் மகன் அபிநயா ரெட்டி திருப்பதி துணை மேயராக உள்ளார். மேலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் இளைஞர் விவசாயி பிரிவின் தலைவராகவும் அபிநயா ரெட்டி உள்ளார். கடந்த சில தினங்களுக்கு திருப்பதி வந்த அம்மாநில அமைச்சர் போட்சா சத்தியநாராயணாவை வரவேற்க திருப்பதி ரேனிகுண்டா விமான நிலையத்துக்கு அபிநயா ரெட்டி தனத ஆதரவாளர்களுடன் சென்றார்.

விமான நிலையம்

திருப்பதி ரேனிகுண்டா விமான நிலையத்தில், அபிநயா ரெட்டியையும், அவரது ஆதரவாளர்களையும் விமான நிலையத்தின் உள்ளே அனுமதிக்க விமான நிலைய மேலாளர் சுனில் மறுத்து விட்டார். இதனையடுத்து அபிநயா ரெட்டிக்கும், விமான நிலைய மேலாளர் சுனிலுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இந்த சூழ்நிலையில், ரேணிகுண்டா விமான நிலையம் மற்றும் ஊழியர்கள் குடியிருப்புகளுக்கு தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இது அபிநயா ரெட்டியின் பதிலடியாக பார்க்கப்பட்டது.

நாரா லோகேஷ்

ஆனால், குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக குடிநீர் விநியோகம் தடைபட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்தது. மேலும், வடிகால் பிரச்சினை இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். வடிகால் நீர் தெலுங்கு கங்கை நீரை மாசுபடுத்துகிறது என்று மாநகராட்சி தெரிவித்தது. தெலுங்கு தேசம் கட்சியின் நாரா லோகேஷ் டிவிட்டரில், விமான நிலையம் மற்றும் ஊழியர்கள் குடியிருப்புகளுக்கு தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டிருப்பது ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸின் அராஜக ஆட்சிக்கு சான்றாகும். இந்த சம்பவத்தை நான் வன்மையா கண்டிக்கிறேன் என பதிவு செய்துள்ளார்.