"அலங்கார ஊர்தியில் புறக்கணிப்பு; தமிழக அரசே இது நியாயமா?" - கொதித்த அன்புமணி!

 
அன்புமணி

இந்தியா முழுவதும் இன்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் சென்னை மெரினாவில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவின் முக்கிய அம்சமாக மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்திகள் இங்கே இடம்பெற்றிருந்தன. பெரியார், வீரமங்கை வேலு நாச்சியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், பாரதியார், ரெட்டமலை சீனிவாசன், காயிதே மில்லத், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உள்ளிட்டோர் அடங்கிய நான்கு அலங்கார ஊர்திகள் வலம் வந்தன.

தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி... அடம்பிடிக்கும் அன்புமணி! - சமாதான  முயற்சியில் அ.தி.மு.க? | PMK Dissatisfied with the allocation of  constituencies with admk

மக்களிடையே இது பெரும் வரவேற்பைப் பெற்றபோதிலும் பாமகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வட தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்களின் உருவங்கள் அலங்கார ஊர்தியில் இடம்பெறவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர். பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு நாள் அணிவகுப்பில் அணிவகுத்த தமிழக அரசின் அலங்கார ஊர்திகளில் இந்திய விடுதலைக்காக போராடிய, உயிர்நீத்த வடதமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் எவரின் உருவச்சிலையும் இடம் பெறாதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.

Image

நாகப்ப படையாட்சி காந்தியடிகளுடன் இணைந்து போராடி உயிர்நீத்தவர், கடலூர் அஞ்சலையம்மாளின் வீரமும், தீரமும் காந்தியடிகளை வியக்க வைத்தவை. ஆதிகேசவ நாயக்கர் காந்தியிடம் சர்தார் பட்டம் பெற்றவர். ம.பொ.சி சிறந்த விடுதலை வீரர். இவர்களின் தேசப்பற்றும், தியாகமும் யாருக்கும் சளைத்தவையல்ல. டெல்லி அணிவகுப்பில் தமிழகத் தலைவர்களின் சிலைகள் அடங்கிய ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்காக கொதித்தெழுந்த தமிழக அரசு, தமிழகத்தின் ஒரு பகுதி தலைவர்களை புறக்கணிப்பது நியாயமா?. இது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும். இனி இத்தவறு நிகழாமல் உறுதி செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.