சட்டென முளைத்த "உதயா" நகர்... குழந்தைக்கு பெயர் "இன்பநிதி" - திமுகவினரின் "அடடே" சம்பவங்கள்!
உதயநிதி அரசியலுக்கு வருவாரா வர மாட்டாரா என்ற விவாதம் எழுந்து கொண்டிருந்த போதே தடாலடியாக கட்சியின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னர் அவர் வெறும் கட்சியின் உறுப்பினர் மட்டுமே. எந்தவித கீழ் பொறுப்புகளும் வகிக்காமல் ஒரே நாளில் இளைஞரணி எனும் மிகப்பெரிய பொறுப்பை கொடுத்தது அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது என்றே சொல்ல வேண்டும். ஸ்டாலினை கூட சகித்துக் கொள்வோம் உதயநிதியை வாரிசு அரசியலுக்குள் நுழைய சம்மதிக்க மாட்டோம் என எதிர்க்கட்சிகள் கொந்தளித்தன.
ஆனால் இது எங்கள் கட்சி விவகாரம். இன்னொரு கட்சியைச் சேர்ந்த நபர் கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என திமுக முகாமிலிருந்து எதிர் கவுண்டர் வந்தது. நிலைமை இப்படியே போக, உதயநிதியோ அடுத்த கட்டத்திற்கு முன்னேறினார். அதாவது தீவிர அரசியல். 2018ஆம் ஆண்டு தீவிர அரசியலில் இறங்கிய அவர், 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சூறாவளி பிரச்சாரம் செய்தார். அப்போதே அது பிரச்சாரம் இல்லை. அச்சாரம் என்றார்கள். பின்னாளில் 2021 சட்டப்பேரவை தேர்தலில் அது ஊர்ஜீதமாகி போனது. அவருக்கு எம்எல்ஏ சீட் வழங்கப்பட்டது.
அப்போதும் விவாதங்கள் எழுந்தன. வாரிசா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்யட்டும் என ஒரே வார்த்தையில் முடித்துவிட்டார் உதயநிதி. பெருவாரியான வாக்கு வித்தியாசத்திலும் அவர் வென்றார். இச்சூழலில் தான் உதயநிதி அமைச்சராக வேண்டும் என திமுக அமைச்சர்கள் சொல்லிவைத்தாற் போல கூறி வருகின்றனர். கூட்டத்தில் ஒருசிலர் துணை முதலமைச்சர் ரேஞ்சுக்கு கூவி கொண்டிருக்கிறார்கள். மேல் மட்டத்திலேயே இந்த நிலை என்றால் கடைக்கொடி தொண்டர்கள், அவர்களுக்கு முன்னால் இருக்கும் வட்ட, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் உதயநிதி மகன் இன்பநிதி வரை இறங்கி அடித்து வருகிறார்கள்.
அதனை ஊர்ஜிதப்படுத்தும் சம்பவம் தான் கோவையில் அரங்கேறியிருக்கிறது. கோவை மாவட்டம் தோலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதி சீங்குழி. இங்கு இருளர்கள், அருந்ததியர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். 96-களில் அப்போதைய முதல்வர் கருணாநிதி இம்மக்களுக்காக இடம் ஒதுக்கினார். அப்பகுதிக்கு தான் உதயா நகர் என பெயர் சூட்டியிருக்கிறார்கள். உதயநிதியின் பிறந்தநாளையொட்டி இந்நிகழ்ச்சி நடந்துள்ளது. அச்சமயம் அந்தப் பகுதியில் ஆண் குழந்தை ஒன்று பிறக்க, அதையும் விட்டுவைக்காமல் இன்பநிதி என பெயர் சூட்டி கொண்டாடி தீர்த்திருக்கிறார்கள்.