தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் என உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி பேசிய நிலையில், கூட்டணி ஆட்சிதான் என அமித்ஷா மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி வரலாற்று வெற்றியை பெரும். ஊழல், குடும்ப அரசியல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றால், திமுக அரசு மீது தமிழக மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என கூறினார். வெற்றி பெற்றால் ஆட்சியில் இடம்பெறுவீர்களா என்ற கேள்விக்கு, ஆம் என்றும் அமித்ஷா பதிலளித்துள்ளார். கூட்டணியில் விஜய் வர வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா, நாங்கள் பல கட்சிகளை ஒரே கூட்டணியில் கொண்டு வர முயற்சிக்கிறோம், தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்றார்.
தொடர்ந்து பேசிய அமித்ஷா, “திமுகவில் உள்ள அதிகார மையங்களால் நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளனர். முதலமைச்சர், துணை முதலமைச்சர், கனிமொழி என பல அதிகார மையங்கள் உள்ளனர். திமுக ஆட்சி மீது தமிழக மக்கள் வெறுப்பில் உள்ளனர். திமுக மீதான அதிருப்தியால் என்டிஏ கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெறும்” என்றார்.


