சித்துவை நீக்கியவுடன் அவரை மீண்டும் அமைச்சரவையில் சேர்த்து கொள்ளும்படி இம்ரான் கான் தூது அனுப்பினார்.. அமரீந்தர் சிங்

 
இம்ரான் கான்

நான் முதல்வராக இருந்தபோது சித்துவை அமைச்சரவையிலிருந்து நீக்கியவுடன், அவரை மீண்டும் அமைச்சரவையில் சேர்த்து கொள்ளும்படி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தூது அனுப்பினார் என்று கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்தார்.

பஞ்சாப் முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங், தற்போதைய பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக முதல்வர் பதவியிலிருந்து விலகினார். மேலும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். எதிர்வரும் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வுடன், பஞ்சாப் லோக்  காங்கிரஸ்  கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. 

கேப்டன் அமரீந்தர் சிங்

இந்நிலையில், நேற்று கேப்டன் அமரீந்தர் சிங், பா.ஜ.க.வுடான  தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். பஞ்சாபில் பா.ஜ.க. கூட்டணியில் பஞ்சாப் லோக் காங்கிரஸ் 37 இடங்களில் போட்டியிடுகிறது என்று கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்தார்.  மேலும் அவர் கூறுகையில், நான் முதல்வராக இருந்தபோது எனது அமைச்சரவையிலிருந்து நவ்ஜோத் சிங் சித்துவை நீக்கிய உடனேயே, பாகிஸ்தானில் இருந்து பரஸ்பரம் பழகிய ஒருவரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர் மூலம் பாகிஸ்தான் பிரதமர் (இம்ரான் கான்) ஒரு கோரிக்கை அனுப்பி இருந்தார்.

நவ்ஜோத் சிங் சித்து

சித்துவை உங்கள் அமைச்சரவையில் திரும்ப சேர்த்து கொள்ள முடிந்தால் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். அவர் என்னுடைய பழைய நண்பர். அவர் வேலை செய்யவில்லை என்றால் நீங்கள் அவரை நீக்கலாம் என்று பாகிஸ்தான் பிரதமர் அவர் மூலம் என்னிடம் கோரிக்கை வைத்தார் என்று தெரிவித்தார். கேப்டன் அமரீந்தர் சிங்கின் இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் அமரீந்தர் சிங்கின் தகவல் குறித்து நவ்ஜோத் சிங் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். செலவு சக்தியாக இருக்கும் ஒருவரை பற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.