பஞ்சாப் தேர்தலில் பா.ஜ.க.வுடன் இணைந்து போட்டி.. கொள்கை ரீதியான கூட்டணி.. கேப்டன் அமரீந்தர் சிங்

 
பா.ஜ.க.

எதிர்வரும் பஞ்சாப் தேர்தலில் பா.ஜ.க.வுடன் இணைந்து பஞ்சாப் லோக் காங்கிரஸ் போட்டியிடும் என்று கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்தார்.

பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவரும், பஞ்சாப் முன்னாள் முதல்வருமான கேப்டன் அமரீந்தர் சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: எதிர்வரும் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வுடன் இணைந்து பஞ்சாப் லோக் காங்கிரஸ் போட்டியிடும். எங்கள் கட்சி, சுக்தேவ் திண்ட்சாவின் கட்சி மற்றும் பா.ஜ.க. ஆகியவை இடையே தொகுதி பகிர்வு ஏற்பாடு இருக்கும். சரியான (தொகுதிகள்) எண்ணிக்கையை  என்னால் சொல்ல முடியாது. நாங்கள் கொள்கை ரீதியான கூட்டணியில் இருப்போம். 

கேப்டன் அமரீந்தர் சிங்

முதல்வர் யார் என்பதை கூட்டணி கட்சிகள் அனைத்தும் முடிவு செய்யும். தேர்தலுக்கு முன் நேரம் பிரச்சினை இல்லை. 1980ல் மக்களவை தேர்தலுக்கு 14 நாட்களுக்கு முன்பு நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். கேப்டன் அமரீந்தர் சிங் விரைவில் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.

ஜே.பி. நட்டா

பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவர் கேப்டன் அமரீந்தர் சிங் அண்மையில் விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வு கண்டால் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்போம் என்று தெரிவித்து இருந்தார். அதேவேளையில் மத்திய அரசும் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்ததோடு, அது தொடர்பான மசோதாவையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.