சிவப்பு.. இது அனுமனின் நிறம், சூரியனின் நிறம், இது உறவுகளின் நிறம்... மோடிக்கு பதிலடி கொடுத்த அகிலேஷ்
சமாஜ்வாடி கட்சியை சிவப்பு தொப்பி என்று தாக்கிய பிரதமர் மோடிக்கு, சிவப்பு அனுமனின் நிறம், சூரியனின் நிறம், உறவுகளின் நிறம் என்று அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார்.
உத்தர பிரதேசம் கோரக்பூர் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்கிழமையன்று ரூ.9,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் சமாஜ்வாடி கட்சியின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக சாடினார். மோடி கூறியதாவது: இன்று உத்தர பிரதேசம் முழுவதும் சிவப்பு தொப்பிகள் சிவப்பு விளக்குகளை மட்டுமே கவனித்துக் கொண்டு இருந்தன என்பது தெரியும். உங்கள் வலிக்கும், பிரச்சினைகளுக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
மோசடிகளுக்காகவும், தங்கள் கஜானாவை நிரப்பவும், சட்ட விரோத ஆக்கிரமிப்புகளுக்காகவும், மாபியாகளுக்கு சுதந்திரம் வழங்குவதற்காகவும் சிவப்பு தொப்பிகளுக்கு அதிகாரம் தேவை. சிவப்பு தொப்பிகள் பயங்கரவாதிகளிடம் கருணை காட்டவும், அவர்களை சிறையில் இருந்து வெளியே கொண்டு வரவும் அரசாங்கத்தை அமைக்க விரும்புகின்றன. எனவே சிவப்பு தொப்பிகள் உத்தர பிரதேசத்துக்கு சிவப்பு எச்சரிக்கை என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். அவை ஆபத்தான மணிகள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் சிவப்பு தொப்பி பேச்சுக்கு சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். அகிலேஷ் யாதவ் இது தொடர்பாக கூறியதாவது: சிவப்பு நிறம் உணர்ச்சிகளை குறிக்கிறது. பா.ஜ.க.வினருக்கு உணர்வுகள் புரியாது. இது புரட்சியின் நிறமும் கூட. இது மாற்றத்தையும் பிரதிபலிக்கிறது. உத்தர பிரதேசத்தில் இந்த முறை மாற்றம் வரப் போகிறது என்பது (பா.ஜ.க.) அவர்களுக்கு தெரியும். முன்னதாக முதல்வர் (யோகி ஆதித்யநாத்) இந்த மொழியை பயன்படுத்தினார். இது புதிதல்ல. தெய்வங்களிலும் சிவப்பு நிறத்தை காணலாம். அனுமனின் நிறம் சிவப்பு. சூரியனின் நிறம் சிவப்பு. இது உறவுகளின் நிறம். இது பா.ஜ.க.வுக்கு புரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.