இந்த முறை பா.ஜ.க.வை தோற்கடிக்க ஒவ்வொரு இளைஞர்களும் பாடுபடுவார்கள்... அகிலேஷ் யாதவ்

 
அகிலேஷ் யாதவ்

இந்த முறை (உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில்) பா.ஜ.க.வை தோற்கடிக்க ஒவ்வொரு இளைஞர்களும் பாடுபடுவார்கள் என சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில் நேற்று மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.  இந்த போராட்டத்தின் போது மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது: குடியரசு தினத்தன்று நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இளைஞர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் போதுதான் நமது அரசியல் சாதனம், நாடு முன்னேறும். இளைஞர்கள் மீது தடியடி நடத்தி அவமானப்படுத்துகிறார்கள். இந்த முறை பா.ஜ.க.வை தோற்கடிக்க ஒவ்வொரு இளைஞர்களும் பாடுபடுவார்கள்.

உத்தர பிரதேச போலீஸ்

இளைஞர்கள் வேலை, தங்களது உரிமைகளை கேட்ட போதெல்லாம் மாநில அரசு அவர்கள் மீது தடியடி நடத்தியது. துரதிர்ஷ்டவசமாக போலீசார் இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர், விடுதிகளை சேதப்படுத்தினர், மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். மாநிலத்தில் பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன, கேள்வி தாள்கள் கசிந்தன. இளைஞர்கள் இந்த முறை அரசுக்கு எதிராக உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பா.ஜ.க.

முன்னதாக அகிலேஷ் யாதவ் டிவிட்டரில், அலகாபாத்தில் வேலை வாய்ப்புக்காக குரல் எழுப்பிய அப்பாவி மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்துவது வெட்கக்கேடானது மற்றும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாணவர்களுடன் பா.ஜ.க. அரசு தவறாக நடந்து கொண்டதால், பா.ஜ.க.வின் வரலாற்று வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். போராடும் மாணவர்களுடன் சமாஜ்வாடி இருக்கும் என்று பதிவு செய்து இருந்தார்.