இந்து கோயிலுக்கு முகாலய மன்னர் ஔரங்கசீப் நிலம் கொடுத்தார்.. சர்ச்சையை கிளப்பிய எம்.எல்.ஏ.

 
அமினுல் இஸ்லாம்

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள இந்து கோயிலுக்கு முகாலய ஆட்சியாளர் ஔரங்கசீப் நன்கொடையாக நிலம் வழங்கினார் என்று ஏ.ஐ.யு.டி.எப். கட்சி எம்.எல்.ஏ. பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.ஐ.யு.டி.எப். கட்சி எம்.எல்.ஏ. அமினுல் இஸ்லாம் அதிரடியான கருத்துக்களுக்கு பெயர் போனவர்.  தற்போது அமினுல் இஸ்லாம் பேசிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் அமினுல் இஸ்லாம் பேசியிருப்பதாவது: முகலாய ஆட்சியாளர் ஔரங்கசீப், கவுகாத்தியில் உள்ள காமாக்யா கோயிலுக்கு நிலம் வழங்கினார். இந்தியாவில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு ஔரங்கசீப் நிலம் ஒதுக்கியதற்கான பதிவுகள் உள்ளன.

ஔரங்கசீப் (மாதிரிபடம்)

அந்த நேரத்தில் பாரபட்சம் இல்லாததால் இந்து மன்னர்களும் மசூதிகளுக்காக நிலம் வழங்கினர். இந்து கோயிலுக்கு ஔரங்கசீப் நிலம் கொடுத்தது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்து இருந்தார். அமினுல் இஸ்லாமின் இந்த பேச்சு அசாமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநில முதல்வரும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ஹிமந்தா பிஸ்வா சர்மா

இது தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், அமினுல் இஸ்லாமின் அறிக்கை இந்திய கலாச்சாரத்துக்கு அவமரியாதை. எனது அரசாங்கத்தின்கீழ், இது போன்ற அறிக்கைகளை சகித்துக் கொள்ள முடியாது. காமாக்யா, சங்கர்தேவ் மற்றும் முகமது நபியை கூட யாரும் இழுக்கக் கூடாது என்று தெரிவித்தார். 2020 ஏப்ரல் மாதத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக வகுப்புவாத கருத்துக்களை தெரிவித்ததற்காக அமினுல் இஸ்லாம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.