அதிமுகவை விமர்சிக்க கூடாது; இதை யாரும் மீறக்கூடாது; சுமூக உறவு வச்சிக்கணும் - நட்டா உத்தரவு
அதிமுக -பாஜக மோதல் வலுத்து வரும் நிலையில் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி சுமூக உறவை இழந்திருக்கும் நிலையில், பாஜக தேசிய தலைவர் நட்டா இதில் தலையிட்டு, அதிமுகவுடன் சமூக உறவை வைத்துக் கொள்ள வேண்டும். இதை மீறக் கூடாது என்று உத்தரவு விட்டு இருக்கிறார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்களின் தடாலடி நடவடிக்கையால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக -பாஜக கூட்டணி முறியும் என்று பரபரப்பு எழுந்தது. அந்த அளவுக்கு அண்ணாமலையும் அவரது ஆதரவாளர்களும் அதிமுக தலைமையினை விமர்சிக்க, பதிலுக்கு அதிமுக நிர்வாகிகள் பாஜகவையும் அண்ணாமலையையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதனால் பாஜக -அதிமுக கூட்டணி முறியும் என்ற பரபரப்பு எழுந்திருந்த நிலையில், அதிமுகவுடன் கூட்டணி தொடர வேண்டுமென்றால் டெல்லியில் உள்ள தேசிய தலைவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று அதிமுகவின் சீனியர் நிர்வாகிகள் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் பாஜகவின் தேசிய தலைவர் ஜெ. பி. நட்டா, அதிமுகவை யாரும் விமர்சிக்க கூடாது. அக்கட்சியுடன் சமூக உறவை வைத்துக் கொள்ள வேண்டும். அதிமுகவின் தலைமை பற்றியோ, அக்கட்சியின் தொண்டர்களை பற்றியோ யாரும் குறை சொல்ல வேண்டாம். தமிழக பாஜக நிர்வாகிகளும் தொண்டர்களும் இதை பின்பற்றி நடக்க வேண்டும் . இதை மீறி நடக்கக்கூடாது என்ற உத்தரவிட்டிருக்கிறார்.
கடந்த பத்தாம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த நட்டா தமிழக பாஜக நிர்வாகிகளுடன் தனியாக ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்த கூட்டத்தில் தான் பாஜக நிர்வாகிகளுக்கு இந்த உத்தரவுகளை வழங்கியிருக்கிறார் என்று தகவல்.