ஓபிஎஸ்- ஈபிஎஸ்க்கு எதிராக 32 பேர் போட்டி!
அதிமுகவில் ஓபிஎஸ் -இபிஎஸ்க்கு எதிராக 32 பேர் களத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 7 ம்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தன. தேர்தலில் போட்டியிட அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இருப்பதோடு அவர்கள் மீது கட்சியின் சார்பில் எந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் அதிமுகவின் உறுப்பினர்களாக இருப்பவர்கள் மட்டுமே உட்கட்சி தேர்தலில் போட்டியிடவும், முன்மொழியவும் வழிமொழியும் முடியும் என அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள சி.பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலையில் தங்கள் மனுக்களை ஒன்றாக தாக்கல் செய்தனர். அவர்களின் மனுக்களை முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 15 பேர் முன் மொழிந்து வழி மொழிந்தனர். இந்நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு 32 பேர் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாக 197 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.


