போராட்டத்தை தொடர்வதில் எந்த பலனும் இல்லை.. எல்லோரும் வீட்டுக்கு போங்க.. விவசாயிகளிடம் மத்திய அமைச்சர் வேண்டுகோள்

 
விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்து விட்டதால், விவசாயிகள் போராட்டத்தை தொடர்வதில் எநத பலனும் இல்லை, போராட்டத்தை முடித்து கொண்டு வீட்டுக்கு செல்லுங்கள் என்று விவசாயிகளிடம் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வேண்டுகோள் விடுத்தார்.

மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியதாவது: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் (நாளை) 3 விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. பயிர் பல்வகைப்படுத்துதல் மற்றும் ஜீரோ பட்ஜெட் விவசாயம் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி.) முறையை மிகவும் வெளிப்படையானதாகவும், பயனுள்ளதாகவும் மாற்றுவது போன்ற பிரச்சினைகளை குறித்து விவாதிக்க ஒரு குழுவை அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 

மத்திய அரசு

இந்த குழுவில் விவசாயிகள் அமைப்புகளின் பிரதிநிதிகள் இருப்பார்கள். இந்த குழுவின் அரசியலமைப்பின் மூலம், விவசாயிகளின் எம்.எஸ்.பி. மீதான கோரிக்கை நிறைவேறுகிறது. விவசாயிகள் வேளாண் கழிவுகளை எரிப்பதை குற்றமாக கருதக்கூடாது என்று விவசாயிகள் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இந்த கோரிக்கையை இந்திய அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்த பிறகு, விவசாயிகள் போராட்டத்தை தொடர்வதில் எநத பலனும் இல்லை. விவசாயிகள் தங்கள் போராட்டத்தை முடித்து கொண்டு வீடுகளுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நரேந்திர சிங் தோமர்

கடந்த ஆண்டு நவம்பர் முதல் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் நாடு தழுவிய போராட்டத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் அண்மையில் மத்திய அரசு அந்த சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்தது. இதனையடுத்து விவசாயிகள் போராட்டத்தை முடித்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றும் வரை எங்களது போராட்டம் தொடரும் விவசாயிகள் அமைப்புகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.