வேட்டியை மடித்து கட்டிய மனோஜ் பாண்டியன்.. தடுத்த ஓபிஎஸ்! பேரவையில் அதிமுகவினர் அலப்பறை

 
admk

யார் அதிமுக என்று சட்டப்பேரவையிலே கடும் வாக்குவாதத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் மனாஜ் பாண்டியன் வேட்டியை மடித்துகட்டிக் கொண்டு சென்று எதிர்ப்பை காட்டியதால் பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது. 

சட்டப்பேரவை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆன்லைன் ரம்மி தடைச்சட்டத்தை தாக்கல் செய்து உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றி தரவேண்டும் என்று தெரிவித்தார்.  இதை தாடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாமக, விசிக, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளாக ஒரு உறுப்பினர் மசாதாவை ஆதரித்து பேசினர். அப்போது அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம், ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மாநில அரசுக்கு உரிமையுள்ளதாக உயர்நீதி மன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியது என்றும், சட்டத்தை இயற்றுவதும், அதை அமல்படுத்துவதும் சட்டமன்றம் தான் என்றும் கூறினார். சட்டம் இயற்ற உரிமை உள்ளதா, இல்லையா என்பதை நீதிமன்றம் தான் சொல்ல வேண்டும் என்று தெரிவித்த தளவாய் சுந்தரம், இந்தச் சட்டத்தை முழுமையாக அதிமுக ஆதரிக்கிறது என்று கூறினார்.

அவரை தொடர்ந்து பேசிய  முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் கொண்டுவந்த தடை சட்டத்தை விவாதம் இன்றி  ஒருமனதாக நிறைவேற்றி இருக்கலாம். ஆனால் விவாதம் நடைபெறுவதாகவும், அதிமுக சார்பாக சட்ட மசாதாவிற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறினார். உடனே அதிமுக சார்பாக என பேசிய ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் கடும் கண்டனக்குரல் எழுப்பினர்.

அப்போது பேசிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக சார்பில் தளவாய்சுந்தரம் பேசிவிட்டார், மற்றொருவருக்கு வாய்ப்பு தருவது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் யார் பக்கம் இருக்கிறார்களோ, அவர்கள் தான் எதிர்க்கட்சி. கட்சிக்கு ஒருவர் பேச வேண்டும் என்பது தான் மரபு” எனக் கூறினார்.

இதற்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சி துணைத்தலைவர் என்றோ, அதிமுக உறுப்பினர் என்றோ அழைக்கவில்லை, முக்கியமான மசோதா என்பதால் மூத்த உறுப்பினர், முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையிலே அனுமதி வழங்கியதாக விளக்கம் அளித்தார். சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று கூறிய சபாநாயகர், அதிமுக விவகாரங்களுக்குள் தான் வரவில்லை என்றார்.இந்த சூழலில் அதிமுக உறுப்பினர் கோவிந்தசாமிக்கும் மனோஜ் பாண்டியனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சட்டப்பேரவையில் மனோஜ் பாண்டியன் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு எதிர்ப்பை காட்ட சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சபாநாயகரின் விளக்கத்தை ஏற்க மறுத்த அதிமுக உறுப்பினர்கள், தொடர்ந்து கூச்சலிட்டு வெளிநடப்பு செய்தனர்.

அதிமுகவிற்குள் ஒற்றை தலைமை சர்ச்சைக்கு பின்பு எதிர்கட்சி துணைத்தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரை நியமிப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கான கடிதமும் சபாநாயரிடம் கொடுக்கப்பட்டது. இதனால் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அருகே உள்ள ஓ.பன்னீர்செல்வம் இருக்கை மாற்றம் செய்யப்படுமா என்று சபாநாயகரிடம் கேள்வி எழுப்பட்ட நிலையில் இந்த விவகாரம் பேசி முடிக்கப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். 

இந்த நிலையில், இருக்கையும் மாற்றம்  செய்யவில்லை.  ஈபிஎஸ், ஓபிஎஸ் அருகருகே அமர்ந்திருந்த நிலையில் முதன் முறையாக இன்று நேரடியாக பேரவையில் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடதக்கது.