அதிமுகவை திமுகவுடன் இணைப்பதற்கு எம்ஜிஆர் முயற்சி செய்தாரா?- செல்லூர் ராஜூ பதில்

அதிமுக தலைமையினை ஏற்று எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடனே கூட்டணி என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி ஊர்மெச்சிகுளம் பகுதியில் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுத்தரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் மற்றும் அண்ணா நகரில் புதிய பேருந்து நிறுத்த நிழற்குடையினை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ, “அதிமுக தலைமையில் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ள கூடிய கட்சிகளுடனே அதிமுக கூட்டணி அமைக்கும் என்பது எங்கள் கொள்கை. பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து நாங்கள் விலகி விட்டோம், தற்போது நயினார் நாகேந்திரன் கூறுகிறார் என்றால் அது அவருடைய கருத்து. பெரியாரின் ஆசீர்வாதம் பெற்றவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. பெண் சிசுக்கொலையை தடுக்கும் வகையில் தொட்டில் குழந்தை திட்டம் கொண்டு வந்தார் ஜெயலலிதா. பெண் குழந்தைகள் படிக்க வேண்டும், ஆண்களுக்கு நிகராக பெண்கள் இருக்க வேண்டும் என்று நினைத்தவர் தந்தை பெரியார், அதை நிறைவேற்றியவர் ஜெயலலிதா. தந்தை பெரியாரின் கொள்கையை அம்மா பின்பற்றினார்
அதிமுகவை திமுகவுடன் இணைப்பதற்கு எம்ஜிஆர் முயற்சி செய்தார் என்று துரைமுருகன் தவறான தகவலை சொல்லி வருகிறார். இது முழு பூசணிக்காவை சோற்றில் மறைப்பதற்கான சம்பவம், அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. அதிமுக ஆரம்பத்தில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டபோது திமுக நிர்வாகிகள் கலைஞரிடம் கூறி எம்ஜிஆருடன் பேச்சு வார்த்தை நடந்தது தானே, தவிர இறுதி கட்டத்தில் இல்லை” என்றார்.