“குள்ளநரிகள் பல வேடமிட்டு பழனிசாமியை அழிக்க பார்த்தார்கள்”- ராஜேந்திர பாலாஜி

 
rajendrabalaji rajendrabalaji

குள்ளநரித்தனமாக எடப்பாடி பழனிச்சாமி  ஆட்சியை கவிழ்ப்பதற்கும், கட்சியை உடைப்பதற்கும் உள்ளிருந்த வேலை பார்த்தவர்கள் தற்பொழுது வெளியே இருந்து கொண்டு கூக்குரல் இடுகிறார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விமர்சித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி பகுதியில் மாவீரன் கிரிக்கெட் கிளப் சார்பாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு  பரிசளிப்பு விழா நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு  பரிசு கோப்பையை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ராஜேந்திர பாலாஜி,  “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுகின்ற திமுக அரசை விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார். முதல்வரால் பதில் சொல்ல முடியவில்லை. எங்கு பார்த்தாலும் கனைகளை ஏவி திமுகவை திக்கு முக்காட வைத்துக் கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி ஒரு சாமானியனாக அறியப்பட்டவர். சரித்திரத்தில் இடம்பெறக்கூடிய அளவிற்கு வலுவாக நல்ல செயல்களை செய்ததன் காரணமாக இன்று தலைவனாக உயர்ந்திருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வரவேண்டும் என மக்கள் பேசுகிறார்கள்.

கட்சி பிளவு பட்டது என்ன சொல்லுவார்கள்,  எங்கே பிளவு பட்டு உள்ளது? அதிமுக சரியாக இருக்கிறது. அதிமுக-வை குறை சொல்லிக் கொண்டே இருப்பவர்கள் இப்பொழுதும் குறை சொல்கிறார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. இரட்டை இலையும், அதிமுக என்ற கட்சியும் எடப்பாடி பழனிச்சாமியின் கையிலே பத்திரமாக இருக்கிறது. 2 கோடி  அதிமுக தொண்டர்கள் எடப்பாடியாரை சுற்றி பக்க பலமாக பாதுகாப்பாக இருக்கிறார்கள். டிசம்பருக்கு பின்னால் திமுகவிற்கு நேர காலம் இறங்கிவிடும். விருதுநகர் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் எடப்பாடி பழனிச்சாமி  விரல் நீட்டுகின்ற வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். விருதுநகர் மாவட்டத்தில் களமாடுவதற்கு அண்ணா திமுக தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள். குள்ளநரிகள் பல வேடமிட்டு எடப்பாடி பழனிச்சாமியை  அழிக்க பார்த்தார்கள். அத்தனையும் தவிடு பொடியாக்கி சட்டத்தின் வழியாகவும் நேர்மையின் வழியாகவும் இந்த இயக்கத்தை கட்டி காத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடி பழனிச்சாமி சுற்றி எத்தனை பேரோ இருந்து குள்ளநரித்தனமாக அவரது ஆட்சியை கவிழ்ப்பதற்கும்,கட்சியை உடைப்பதற்கும் உள்ளிருந்த வேலை பார்த்தார்கள்.தற்பொழுது வெளியே இருந்து கொண்டு கூக்குரல் இடுகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி என்ன செய்து விடுவார் என்று கேட்கிறார்கள் அவரது நான்கரை ஆண்டு கால ஆட்சியே அதற்கு சாட்சி. எத்தனையோ பிரச்சனைகளை சரி செய்து ஒரு அற்புதமான தலைவனாக இருந்து இந்த இயக்கத்தை வழிநடத்தக்கூடிய எடப்பாடி பழனிச்சாமிக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.