சசிகலாவை சந்திப்பேன்; டிடிவி தினகரனுடன் இணைவேன்- ஓ.பன்னீர்செல்வம்

 
ops

வாய்ப்பு இருந்தால் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவோம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ops

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து நாங்கள் முடிவு எதுவும் எடுக்கவில்லை என்றும் சிவில் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. 

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையை வரும் 27-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய  ஓ.பன்னீர்செல்வம், “வாய்ப்பு இருந்தால், காலத்தின் கட்டாயம் என்றால் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன், விரைவில் சசிகலாவை சந்திப்பேன். பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பைவிட மக்கள் தீர்ப்பையே நம்புகிறேன். மக்கள் தீர்ப்பை மட்டுமே எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.தமிழக அரசு நிதிநிலை அறிக்கை வருகிற 20-ஆம் தேதி நிதிநிலை தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிவந்தவுடன் என்னுடைய கருத்தை சொல்கிறேன். இபிஎஸ்இன் நடவடிக்கை ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை சட்ட நீதிக்கு புறம்பாக நடைபெறுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். ” எனக் கூறினார்.