ஓபிஎஸ் புதிய கட்சி ஆரம்பிக்க உள்ளார்- ராஜன் செல்லப்பா

 
rajan chellappa

தேசிய கட்சிகள்  தமிழகத்தில் வளர முடியாது எனவும், திமுக,அதிமுகவிற்கு  மட்டுமே உள்கட்டமைப்பு உள்ளது என எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.


மதுரை காதக்கிணறில் அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா  துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, “ஓ.பன்னீர்செல்வம் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் புதிய கட்சி ஆரம்பிக்க உள்ளார். அதற்கான அடித்தளம் தான் திருச்சி கூட்டம். அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள். திறமை இருந்தால் ஓ.பி.எஸ். புதிய கட்சி ஆரம்பித்து அவரை நிரூபிக்கட்டும். அதிமுக என்றால் எடப்பாடி என்று தான் மக்கள் நினைப்பார்கள். எனவே, இயல்பாகவே ஓ.பி.எஸ். அதிமுக அடையாளங்களை கைவிட வேண்டும். 

எடப்பாடியை எம்.ஜி.ஆர் என சொல்லவில்லை. எம்.ஜி.ஆர் போல அவருக்கு கண்ணாடி அணிவித்து அழகு பார்த்தார்கள். அவர் எம்.ஜி.ஆர் போல இருக்க வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவரிடம் எம்.ஜி.ஆரின் குணங்கள் இருக்கிறது. இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் ஓ.பி.எஸ் விமர்சிக்கிறார். வேண்டுமானால் இருவருக்கும் எம்.ஜி.ஆர் வேடம் போட்டு, யாருக்கு அது பொருந்துகிறது என பார்க்கலாம். பாஜகவால் தமிழகத்தில் வளர முடியாது. பாஜக, காங் போன்ற தேசிய கட்சிகளில் உட்கட்டமைப்பு இல்லை. அதிமுக கூட்டணி என்பது தேர்தல் கால கூட்டணி தான். யாரை வேண்டுமானாலும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம். 
 
பாஜகவின் கொள்கையில் தொண்டர்களுக்கு மாறுபாடு இருக்கலாம். ஆனால் பாஜக உடனான கூட்டணியை அதிமுக தொண்டர்கள் எதிர்க்கவில்லை. அதிமுக தலைமையில் தான் நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமையும். எங்கள் கட்சியை சேர்ந்த யாரையும் பிரதமர் வேட்பாளராக நாங்கள் முன்மொழியவில்லை" என தெரிவித்தார்.