“வாய் தவறி பேசிவிட்டேன், வருந்துகிறேன்” - அமைச்சர் உதயநிதியை அவதூறாக பேசிய அதிமுக எம்எல்ஏ மன்னிப்பு

 
ADMK MLA

அமைச்சர் உதயநிதியை அவதூறாக பேசிய அதிமுக எம்எல்ஏ குமரகுரு தனது முகநூல் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.

DMK Compliant

கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் அதிமுக சார்பில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட கழக செயலாளர் குமரகுரு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசியதாகவும் தெரிகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதியில் கள்ளக்குறிச்சி நகர திமுக சார்பில் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட கழக செயலாளர் குமரகுருவை கண்டித்து திமுகவினர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது திமுகவினர் அதிமுக மாவட்ட செயலாளர் உருவப்படத்தை எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் எம்.எல்.ஏ குமரகுரு தனது முகநூல் பக்கத்தில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர், மாண்புமிகு அண்ணன்,*புரட்சிதமிழர் எடப்பாடியார்*  அவர்களின் ஆணைக்கிணங்க  19.9.2023 செவ்வாய் அன்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பேரறிஞர் பெருந்தகை *அண்ணா*  அவர்களின் 115வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் நான் நீட் தேர்வு பற்றி பேசியபோது வாய் தவறி தவறுதலாக ஒரு வார்த்தையை சொல்லி விட்டேன். உள்நோக்கம் இல்லாமல் என்னை அறியாமல் பிறர் மனம் புண்படும் வகையில் நான் பேசிய அந்த வார்த்தைக்கு நான் மிகவும் வருந்துகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.