ஸ்டாலின் ஆட்சியை விரட்டி அடிக்க எடப்பாடியாரால் மட்டும் தான் முடியும்: கே.பி.முனுசாமி
இபிஎஸ் படத்தை எரித்தவர்கள் மீது கூட்டணி கட்சி தலைவர்கள் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம் என எம்.எல்.ஏ கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அதிமுகவின் புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் அதிமுக துணை பொதுச் செயலாளருமான கே.பி.முனுசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோருக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். உறுப்பினர் அட்டைகளை மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ஏராளமான தொண்டர்கள் பெற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, “திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடும் ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு நிலைப்பாட்டிலும் உள்ளார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது எட்டு வழி சாலையை எதிர்த்தார்கள். ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் டாஸ்மாக் கடையை படிப்படியாக மூடுவோம் என்று சொன்னார்கள், ஆனால் மூடவில்லை. எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மை எரித்த பாஜகவினர் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம். நாங்கள் எங்களுடைய வருத்தத்தையும் ஆதங்கத்தையும் பாஜகவினரிடம் தெரிவித்தோம். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம். அதன் அடிப்படையில் கூட்டணி கட்சித் தலைவர்கள் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம். எம்ஜிஆர், ஜெயலலிதாவைத் தொடர்ந்து அதிமுகவின் 3வது தலைமையாக இபிஎஸ் உருவாகி உள்ளார். திராவிட கட்சிகள் ஆட்சியில்தான் வளர்ச்சி தமிழ்நாட்டுக்கு இணையாக வேறு எந்த மாநிலமும் இல்லை. ஸ்டாலின் ஆட்சியை விரட்டி அடிக்க எடப்பாடியாரால் மட்டும் தான் முடியும்” என்றார்.