சசிகலாவை வேண்டுமானாலும் பாஜகவில் சேர்த்துக்கொள்ளுங்கள்- ஜெயக்குமார்
அதிமுக ஆட்சிக்காலத்தையும், திமுக ஆட்சிக்காலத்தையும் ஒப்பிட்டு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

அதிமுகவின் இரண்டாம் கட்ட உட்கட்சி தேர்தல் 40 மாவட்டங்களில் இன்று நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற கழக அமைப்புத் தேர்தலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுகவில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறுகிறது. மேலும் அரசு ஊழியர்கள் மாநாட்டில் கஜானா காலி என முதலமைச்சர் பேசியிருப்பது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது. அதிமுக, திமுக இரு ஆட்சிக்காலத்தையும் ஒப்பிட்டு வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? திமுகவிற்கு நிதி மேலாண்மை, நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்த தெரியவில்லை. முதலமைச்சர் வீட்டில் சமையல் நடக்கவில்லை என்றாலும் அதற்கு அதிமுக தான் காரணம் என்று சொல்வதா?
தமிழக முதல்வரை சக்தி வாய்ந்த முதலமைச்சர் என ஆளுநர் பேசியது, வழக்கமாக நிகழ்ச்சிகளில் பெருமையாக பேசுவது போன்று தான், அதனை பெரிது படுத்த தேவையில்லை. அதுமட்டுமின்றி, ஆட்டை கடித்து, மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடிக்கும் நிலைக்கு திமுக அரசு வந்துவிட்டது, பொள்ளாச்சி ஜெயராமன் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துகொள்கிறோம். திமுக தொண்டன் மீது கை வைத்தால் பின்விளைவுகளை திமுக சந்திக்க வேண்டியிருக்கும். எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமான முறையில் நடத்தாவிட்டால் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் நிறக வேண்டிய சூழல் வரும். அண்ணாமலை அவரது கட்சி வேலையை பார்க்கட்டும். அதிமுக விவகாரத்தில் அவர் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ளுமாறு கூற அவர் யார்? வேண்டுமானால் சசிகலாவை பாஜகவில் சேர்த்துக்கொள்ளட்டும்” எனக் கூறினார்.


