கொடியை பயன்படுத்தினால் பொதுச் செயலாளராக முடியுமா? சசிகலாவை வெளுத்து வாங்கிய ஜெயக்குமார்
அதிமுகவிற்கு ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச்செயலாளர், அவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினர் தம்பித்துரை இல்லத்திருமண விழா சேலத்தில் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “அதிமுக பொதுக்குழு கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுக்குழு சர்வ வல்லமை படைத்ததாகும். ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பொதுச்செயலாளரை பொறுத்த வரை ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச் செயலாளர். அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அதனால் தான் அதிமுக- வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டு, கட்சிப் பணிகள் நடக்கிறது. ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி முறை. அதற்காக தான் தற்போது கிளை கழக தேர்தல் நடக்கிறது. ஒருங்கிணைப்பாளரும் , இணை ஒருங்கிணைப்பாளரும் சிறப்பாக கட்சியை வழி நடத்தி வருகிறார்கள் .அதிமுக பிரதான எதிர்க்கட்சியாக செயல்படுகிறது. சிலர் வேண்டும் என்றே அதிமுகவில் பிளவு ஏற்பட்டது போன்று புரளியை கிளப்பி விடுகிறார்கள். அதிமுகவில் எடுக்கப்படும் முடிவுகள் ஒருமித்த கருத்தோடு எடுக்கப்படுகிறது. இதனால் எந்த பிரச்சினையும் ஏற்படுவதில்லை. சில நேரங்களில் அடுத்தடுத்து விவாதங்கள் வரும். ஆனால் ஒருமித்த கருத்தினை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள். பலம் வாய்ந்த கட்சியாக அதிமுக இருக்கிறது.
யாரோ ஒருவர் கட்சியை விட்டு போகிறார் என்றால் அதனால் அதிமுகவிற்கு பாதிப்பு இல்லை. அதிமுக தொண்டர்களால் உருவான கட்சி. அதிமுகவின் சொத்து தொண்டர்களும், பொதுமக்களும் தான். சசிகலா கட்சி கொடியை பயன்படுத்துவதாலும், பொதுச்செயலாளர் என பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வதாலும், அவர்கள் தலைவராகி விட முடியாது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக உள்ளிட்ட யார் வந்தாலும் அரவணைத்துக் கொண்டு செல்வோம். கூட்டணிக்குள் வருவதும் , வராததும் அவர்களுடைய விருப்பம்” எனக் கூறினார்.