தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை: ஜெயக்குமார்

 
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

மத்தியில் ஆட்சியில் இருந்தும் தமிழ்நாட்டு நலனுக்கு எதிராக துரோகம் செய்தவர்களை நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் முன் தோல் உரித்து காட்டுவோம் என அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

அதிமுக மாநாட்டை தடுக்க முதல்வர் சதி- ஜெயக்குமார்

நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் கூட்டணி பேசுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு குழுவினரின் ஆலோசனைக் கூட்டம், கட்சி தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது. இதில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது பிஜேபி உடன் அமைத்த கூட்டணியை விட்டு விலகுவதாக அதிமுக அறிவித்துள்ளது. இதன் பின்னர் கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகளான பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் பிஜேபி கூட்டணியில் தொடர உள்ளதாக தகவல் உள்ளதால் தமிழ் மாநில காங்கிரஸ் , புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் அதிமுக கூட்டணியில் தொடர்கிறதா? இல்லையா? என வெளிப்படையாக அறிவிக்காமல் உள்ளன. இதை தொடர்ந்து, இந்த கட்சிகளை கூட்டணியில் தொடர வைப்பது குறித்தும், புதிய கட்சிகளை கூட்டணியில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்துவது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, அதிமுக தேர்தல் பிரச்சாரக் குழுக் கூட்டம் மற்றும் தேர்தல் விளம்பரக் குழுக் கூட்டமும் நடைப்பெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார், “கூட்டணி குறித்து கவலை தேவையில்லை. எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் இருக்கிறது என தேர்தல் நெருக்கத்தில் தெரியவரும். கூட்டணி தொடர்பாக வடக்கே (பீகார்) ஏற்பட்ட நிலை தமிழ்நாட்டிலும் வரக்கூடும். நெல்லிக்காய் மூட்டை சிதறுவது போல திமுக கூட்டணியும் சிதறும். எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் வருகின்றன என்பது பொறுத்து அதிமுக போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை தேர்தல் நெருக்கத்தில் தெரிவிக்கப்படும். தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் பிஜேபி உடன் கூட்டணி இல்லை என்று தான் சொல்லுவோம். தேர்தல் பிரச்சாரத்தில் மாநில நலனுக்கு எதிராக மத்தியில் ஆட்சியில் இருந்தும் துரோகம் செய்தவர்களை மக்கள் முன் தோல் உரித்து காட்டுவோம். மாநில அரசு மட்டும் மத்திய அரசு குறைகளை மக்களிடம் தோல் உரித்து காட்டுவோம். பாஜகவின் உருட்டல் மிரட்டலுக்கு அஞ்சுகின்ற இயக்கம் அதிமுக இல்லை. ஓபிஎஸ் அணி பாஜகவின் கொத்தடிமையாக உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தனித்தன்மையை நிலைநாட்டியுள்ளார்” என தெரிவித்தார்.