திமுக கூட்டணி கட்சிகள் அதிமுகவிற்கு வர வாய்ப்பு- ஜெயக்குமார்

நடிகர் விஜய் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தேர்தல் நெருங்கும்போது திமுக கூட்டணி கட்சிகள் அதிமுகவுக்கு வர வாய்ப்புள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருப்பதால் எந்த மாற்றமும் ஏற்படலாம். தேவையற்ற பெட்டிகளை கழற்றிவிட்ட பின் அதிமுக ரயில் சென்று கொண்டிருக்கிறது. திமுகவிற்கு இனி ஒவ்வொரு மாதமும் கைது மாதம் தான். அமலாக்கத்துறை சோதனையில் இருந்து எவரும் தப்ப முடியாது.
நடிகர் விஜய் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், வந்தால்தான் அதிலுள்ள நெளிவு சுளிவுகள் பற்றி தெரியும். அரசியல் ஒரு கடல், சாமர்த்தியம் உள்ளவர்கள் நீந்தி கரை சேர்வார்கள். பேனா சின்னத்தை மக்களின் வரிப்பணம் மூலம் கட்டாமல், அறிவாலயத்தில் திமுகவின் அறக்கட்டளை மூலம் அமைக்கலாம். விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு விளையாட்டுப் பிள்ளை. அவர் ஒரு கத்துக்குட்டி. உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் அரசியல் வரலாறு தெரிந்துகொண்டு பேச வேண்டும். தமிழக வரலாறு தெரியாமல் வாரிசு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி வருகிறார். செந்தில்பாலாஜி மீது நடவடிக்கை எடுப்போம் என முதலில் கூறியவரே ஸ்டாலின் தான்.” என்றார்.