அண்ணாமலையை மாற்றினால் பாஜகவுடன் கூட்டணியா?- எடப்பாடி பழனிசாமி பதில்

 
இபிஎஸ்

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக  மாவட்ட கழக அலுவலகத்தில் மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளரும்,  எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

Image

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “கடன் வாங்குவதில் மிகப்பெரிய சாதனை செய்த அரசாக திமுக உள்ளது. இவ்வளவு கடன் வாங்கியும் பெரிய திட்டம் ஏதும் வரவில்லை. ஆண்டுதோறும் கடன் வாங்கிக் கொண்டே சென்றால் அதை எப்படி திருப்பிச் செலுத்துவது? செந்தில்பாலாஜியும், சேகர்பாபுவும் அரசியல் வியாபாரிகள். அமைதிப்படை அமாவாசை எனும் பெயர் செந்தில்பாலாஜிக்கு தான் பொருத்தமாக இருக்கும். 5 ஆண்டுகளில் 2 கட்சிகளில் போட்டியிட்டவர்தான் செந்தில்பாலாஜி. திமுவை செந்தில்பாலாஜியும், சேகர்பாபுவும் எப்படி எல்லாம் விமர்சித்தனர் என்பது அவை குறிப்பில் உள்ளது. ஆனால் நான் அப்படியில்லை. பதவிகளில் இல்லாதபோதும்கூட கட்சி மாறாமல் அதிமுகவில் இருந்தேன்” என்றார்.

தொடர்ந்து அண்ணாமலையை மாற்றினால் பாஜகவுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “அதெல்லாம் ஏன் சார் கேக்குறீங்க? அதுக்கெல்லாம் எங்களுக்கு பவர்ஸ் இல்ல... இல்லாத ஊருக்கு வழி கேக்குற மாதிரி இருக்கிறது. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். நாடாளுமன்ற தேர்தலிலேயே நாங்கள் பாஜக கூட்டணியில் இருந்து வெளிவந்துவிட்டோம்” என்றார்.