கட்சிக்கு எதிராக செயல்படும் துரோகிகளுக்கு எதிராக பாடம் புகட்ட வேண்டும்- ஈபிஎஸ் கூட்டத்தில் தீர்மானம்
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள மாநிலம் முழுவதும் பூத் கமிட்டி அமைக்க அதிமுக செயற்குழு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையிலும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையிலும் நடைபெற்றது. தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடக மாநிலத்தில் இருந்து செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். குறிப்பாக, நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள மாநிலம் முழுவதும் பூத் கமிட்டி அமைப்பது, ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடத்துவது, கட்சிக்கு எதிராக செயல்படும் துரோகிகளுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒருங்கிணைந்து பாடம் புகட்டுவது, அதிமுக தலைமையிலான கூட்டணி தேர்தலில் வெற்றி பெற உழைப்போம் எனவும் மொத்தம் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், கர்நாடக மாநில பொதுத்தேர்தலில் போட்டியிடுவதா அல்லது பாஜகவுக்கு ஆதரவு மட்டும் அளிப்பதா என விரைவில் அதிமுக தலைமை முடிவெடுக்கும் எனவும் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார், "அரசியல் முதிர்ச்சி இல்லாமல் அண்ணாமலை பேசி வருகிறார் .அண்ணாமலை பேயா? பிசாசா? பூச்சாண்டியா? பார்த்தவுடன் பயப்பட? வளர்த்த கெடா மாரில் பாய்கிறது என்பது போல் உள்ளது" என கடுமையாக விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜூ, அண்ணாமலை அதிமுகவை விமர்சித்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் அண்ணாமலை கட்சி பதவிபறிபோகக்கூடும் எனவும் சாடினார்.