திமுக ஆட்சியில் அரசு அலுவலர்களுக்கே பாதுகாப்பில்லை- எடப்பாடி பழனிசாமி

 
eps

திமுக ஆட்சியில் அரசு அலுவலர்களுக்கே பாதுகாப்பில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். 

ep

சேலம் மாவட்டம் தாதகாப்பட்டியில் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சியில் அரசு அலுவலர்களுக்கே பாதுகாப்பில்லை. அலுவலகத்திலேயே விஏஓ கொலை செய்யப்படும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மக்களின் துன்பங்களை 2 மணிநேரம் பேரவையில் பேசினேன். ஆனால் நேரலை செய்யவில்லை. அம்மா உணவகத்தில் தரமான உணவு வழங்காததால் மக்கள் வருகை குறைந்துவருகிறது.

தொழிலாளர்களுக்கு எதிரான சட்டம் கொண்டு வருவதா துணிச்சல்? தொழிலாளர்களுக்கு நன்மை செய்யும் சட்டத்தை கொண்டுவருவதுதான் துணிச்சல். 12 மணிநேர வேலை மசோதாவை கொண்டுவந்த ஸ்டாலின், அதை திரும்ப பெற்றுக்கொண்டு அதனை துணிச்சல் என பேசுகிறார்... இதுவா துணிச்சல்? அதிமுக ஆட்சியில் என்ன நடந்தது? திமுக ஆட்சியில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் உணர வேண்டும். தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடும் என்று பேசினார்கள், இன்று எதுவுமே செய்யாமல் திமுக மக்களை ஏமாற்றிவிட்டது.

திமுக ஆட்சி எப்போது போகும், அதிமுக ஆட்சி எப்போது மலரும் என தமிழகம் முழுவதும் குரல் கேட்கிறது. எல்லாவற்றுக்கும் கருத்து சொல்லும் ஸ்டாலின் ரூ.30,000 கோடி ஊழல் குறித்து இதுவரை வாய் திறக்காதது ஏன்? அதிமுக ஆட்சியில் ஊழல் ஊழல் எனக் கூறிய ஸ்டாலின் தற்போது வாய் மூடி மவுனமாக இருப்பது ஏன்? திமுக ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டினால் உடனே வழக்கு தொடுக்கிறார்கள். தவறுகளை சுட்டிக்காட்டினால் பொய் வழக்கு தொடுப்பதுதான் ஜனநாயகமா? சமூக வலைதளங்களில் திமுகவை விமர்சித்தால் உடனே கைது, இதுதான் ஜனநாயகமா? அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் திமுகவுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்” எனக் கூறினார்.