விஜயுடன் கைகோர்க்கும் ஆதவ் அர்ஜூனா

சட்டமன்ற தேர்தல் பணிக்காக தனியார் நிறுவனத்துடன் தவெக தலைவர் விஜய் ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இவர் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அக்கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை அறிவித்தார். இதனை தொடர்ந்து விஜய் கட்சி பணிகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மும்முரமாக கவனித்து வருகிறார். மாவட்ட பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் தேர்வு மும்மரமாக நடைபெற்றுவரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு பூத் கமிட்டி நிர்வாகியை நியமிக்க அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் பணிக்காக தனியார் நிறுவனத்துடன் தவெக தலைவர் விஜய் ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்துள்ளார். ஆதவ் அர்ஜூனாவின் Voice of commons என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆதவ் அர்ஜூனா தவெகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சட்டமன்ற தேர்தலுக்காக Voice of commons என்ற நிறுவனத்துடன் இணைந்து தகுந்த வியூகங்களுடன் களமிறங்க விஜய் திட்டமிட்டுள்ளார். தவெக தேர்தல் வியூக வகுப்பாளராக ஜான் ஆரோக்கியசாமி இருந்த நிலையில் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜான் ஆரோக்கியசாமியின் ஆடியோ வெளியான நிலையில், அவரை மாற்றிவிட்டு புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார். ஆதவ் அர்ஜூனாவின் நிறுவனம் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் அடுத்த தேர்தல் பணி நகர்வுகளை விஜய் மேற்கொள்ளவுள்ளார்.