பிரபல நடிகர் சோனு சூட் சகோதரி காங்கிரஸில் இணைந்தார்.. கட்சியின் செய்தியை அடிமட்ட அளவில் பரப்ப உதவுவார்.. சன்னி

 
மால்விகா சச்சார் (நடுவில்)

பிரபல நடிகர் சோனு சூட்டின் சகோதரி மால்விகா சச்சார் நேற்று காங்கிரஸில் இணைந்தார்.

பிரபல நடிகர் சோனு சூட். கொரோனா வைரஸின் முதல் அலையின்போது நெருக்கடியில் சிக்கி தவித்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவி செய்தார். இது தவிர குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு பணம், விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தது போன்ற பல உதவிகளை சோனு சூட் செய்து வருகிறார். சோனு சூட் கடந்த நவம்பர் மாதம், தனது சகோதரி மால்விகா சச்சார் எதிர்வரும் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்து இருந்தார்.

சோனு சூட்

இந்நிலையில் நேற்று மால்விகா சச்சார் காங்கிரஸில் இணைந்தார். பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் முன்னிலையில் மால்விகா சச்சார் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அப்போது மால்விகா சச்சாருடன் நடிகர் சோனு சூட்டும் இருந்தார்.

சரண்ஜித் சிங் சன்னி

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தனது டிவிட்டர் கணக்கில், சோனு சூட் மற்றும் அவரது சகோதரி மாளவிகா சூட் சச்சாருடன் சித்து மற்றும் அவர் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து இருந்தார். மேலும், சமூக சேவகரும், நடிகருமான சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூட் சச்சாரை கட்சிக்குள் வரவேற்கிறேன். மாளவிகா முழு நியாயத்துடனும், நேர்மையுடனும் சேவையாற்றுவார். காங்கிரஸ் கட்சியின் செய்தியை அடிமட்ட அளவில் பரப்ப உதவுவார் என்று நான் நம்புகிறேன் என்று பதிவு செய்து இருந்தார்.