12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதன் மூலம் பா.ஜ.க. எளிதாக மசோதாக்களை நிறைவேற்றும்.. காங்கிரஸ் குற்றச்சாட்டு

 
காங்கிரஸ்

மாநிலங்களவையில் இருந்து 12 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்யப்பட்டதன் மூலம்  பா.ஜ.க.வால்  மசோதாக்களை மாநிலங்களவையில் எளிதாக நிறைவேற்ற முடியும் என்று காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மானு சிங்வி குற்றம் சாட்டினார்.

கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் ஒழுங்கீனமான நடந்த கொண்ட எம்.பி.க்கள் ரிபுன் போரா, பிரியங்கா சதுர்வேதி, பினோய் விஸ்வம் உள்பட மொத்தம் 12 எம்.பி.க்கள்  இந்த கூட்டத்தொடரின் எஞ்சிய அமர்வு முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தனர். மாநிலங்களவையில் பெரும்பான்மை பெறும் நோக்கில் 12  எம்.பி.க்களை பா.ஜ.க. இடைநீக்கம் செய்துள்ளது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

பிரியங்கா சதுர்வேதி
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அபிஷேக் மானு சிங்வி கூறியதாவது: நாடாளுமன்ற மாநிலங்களவையில் இருந்து 12 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்யப்பட்டதன் மூலம், தற்போது மாநிலங்களவையில் பா.ஜ.க.வின் உறுப்பினர்களின் பலம் பெரும்பான்மையை விட அதிகமாகியுள்ளது.  இதனால் பா.ஜ.க.வால் பட்டியலிடப்பட்ட மசோதாக்களை மாநிலங்களவையில் எளிதாக நிறைவேற்ற முடியும். இந்த நடவடிக்கைக்கு நாடாளுமன்ற ஜனநாயக வரலாற்றில் எந்த இணையும் இல்லை, இது முற்றிலும் ஜனநாயகத்துக்கு விரோதமானது, சட்ட விரோதமானது மற்றும் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. பா.ஜ.க. ஆட்சியில் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள், பத்திரிகையாளர்கள் தடை செய்யப்படுவார்கள். 

அபிஷேக் மானு சிங்வி

மேலும் இந்த தேசம் இதுவரை இல்லாத சர்வாதிகார மற்றும் சர்வாதிகார அரசங்கமாக தன்னை வகைப்படுத்த பா.ஜ.க. அனைத்தையும் செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நேற்று காலையில் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் எதிர்க்கட்சி தலைவர்கள், 12 எம்.பி.க்கள் இடைநீக்கத்தை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதனை வெங்கையா நாயுடு ஏற்க மறுத்து விட்டார். இதனையடுத்து எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தன.  மேலும், எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மாநிலங்களவையை புறக்கணிக்க எதிர்க்கட்சிக்ள முடிவு செய்துள்ளன.