தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் காங்கிரஸார் எப்படி ஆட்சி அமைப்பார்கள்?... ஆம் ஆத்மியின் பக்வந்த் மான் கேள்வி

 
பக்வந்த் மான்

பஞ்சாபில் தங்களுக்குள்ளே சண்டையிட்டுக் கொள்ளும் காங்கிரஸார் எப்படி ஆட்சி அமைப்பார்கள்? என்று ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பகவந்த் மான் கேள்வி எழுப்பினார்.

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக பகவந்த் மான் அறிவிக்கப்பட்டுள்ளார். முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு பகவந்த் மான் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அதுவே மிகப்பெரிய விஷயம். எனது பொறுப்புணர்வும்,  ஊக்கமும் இரட்டிப்பாகியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மீது பஞ்சாப் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். நாங்கள் எங்கு சென்றாலும், நீங்கள் ஆட்சிக்கு வாருங்கள், எல்லாம் சரியாகிவிடும் என்கிறார்கள். 

ஆம் ஆத்மி

பஞ்சாப் இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக இருந்தது. ஆனால் இப்போது எல்லா அளவுகளிலும் 26 அல்லது 27வது இடத்தில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அகாலிதளம்-பா.ஜ.க. கூட்டணி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மாநிலத்தை சீரழித்துள்ளன. மாநிலத்தில் மாபியா ராஜ்ஜியம் உள்ளது. இளைஞர்கள் கனடாவுக்கும், நியூசிலாந்துக்கும் ஒடுகிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு இங்கு எந்த நம்பிக்கையும் இல்லை. ஆனால் ஆம் ஆத்மி கட்சி புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.  உழைப்போம், வேலை கொடுப்போம், நல்ல பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் உருவாக்குவோம். நம் மாநிலம் எல்லையோர மாநிலம், வலுவான அரசு தேவை. 

காங்கிரஸ்

கேப்டன் அமரீந்தர் சிங் கடந்த முறை பெரிய வாக்குறுதிகளை அளித்தார். மக்கள் அதை நம்பினர். அவர் (கேப்டன்) இதயத்தை உடைத்தார். அவர்கள் (மக்கள்) இப்போது காங்கிரஸால் வருத்தப்படுகிறார்கள். முதல்வர் வேட்பாளரை கூட அறிவிக்காமல் காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்குள் சண்டையிட்டு வருகின்றனர். சர்க்கஸ் போல் தங்கள் ஆட்சியை நடத்தி வருகின்றனர். அப்படியானால், ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளும் இவர்களுக்கு  அரசாங்கத்தை நடத்த இன்னும் 5 ஆண்டுகள் எப்படி கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.