யோகி ஜி மயானங்களை கட்டியது மட்டுமல்லாமல், மக்களையும் அங்கு அனுப்பினார்... அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கு
கடந்த 5 ஆண்டுகளில் யோகி ஜி மயானங்கள் கட்டியது மட்டுமல்லாமல், மக்களை மயானங்களுக்கும் அனுப்பினார் என அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கினார்.
உத்தர பிரதேசம் லக்னோவில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில் கூறியதாவது: கடந்த 75 ஆண்டுகளாக மற்ற அரசியல் கட்சிகள் நாட்டு மக்களை ஏழைகளாகவும், படிக்காதவர்களாகவும் வைத்திருந்தன. இதனால் நாம் அவர்களின் வாக்கு வங்கியாக மாறுவோம்.
கடந்த 5 ஆண்டுகளில் யோகி ஜி மயானங்களை கட்டியது மட்டுமல்லாமல், மக்களை மயானங்களுக்கும் அனுப்பினார். உத்தர பிரதேசத்தில் கோவிட்-19 மேலாண்மை உலகிலேயே மிக மோசமானது. யோகி ஜி உங்களால் முடியாது. உத்தர பிரதேச மக்கள் நல்ல பள்ளிகளை விரும்பினால் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். ஆம் ஆத்மி அரசு அமைந்தால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாய் வழங்கப்படும்.
யோகி ஜி அமெரிக்காவின் மிகப்பெரிய பத்தரிக்கையில் விளம்பரத்துக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்துள்ளார். டெல்லி முழுவதும் யோகி ஜியின் 850 பதாகைகளும், டெல்லி அரசாங்கத்தின் 106 போஸ்டர்களும் உள்ளன. அவர் (யோகி) டெல்லியிலா அல்லது உத்தர பிரதேசத்தில் போட்டியிடுகிறாரா என்று எனக்கு சில சமயங்களில் ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் அரசாங்கத்தை நடத்தாததால் மக்கள் சம்பாதித்த வரிப்பணத்தை எரிக்கிறார்கள் (வீணாக்குகிறார்கள்). இவ்வாறு அவர் தெரிவித்தார்.