அனைத்து கட்சி கூட்டத்தில் எங்களை பேச விடுவதில்லை.. மத்திய அரசு மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

 
சஞ்சய் சிங்

அனைத்து கட்சி கூட்டத்திலும், நாடாளுமன்றத்தில் எங்களை பேச விடுவதில்லை என்று மத்திய அரசு மீது ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. முன்னதாக இந்த கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக டெல்லியில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரலஹாத் ஜோஷி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட மொத்தம் 31 கட்சிகளை சேர்ந்த 42 தலைவர்கள் கலந்து கொண்டனர். .இந்த கூட்டத்தை ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் புறக்கணித்தார். 

மத்திய அரசு

இது தொடர்பாக ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கூறியதாவது: அனைத்து கட்சி கூட்டத்தில் எந்த உறுப்பினரையும் அவர்கள் (அரசு) பேச விடுவதில்லை. இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில், குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதம் குறித்த சட்டம், எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை நீட்டிப்பது உள்ளிட்ட பிற பிரச்சினைகளை நான் எழுப்பினேன்.

எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்

அனைத்து கட்சி கூட்டத்திலும், நாடாளுமன்றத்தில் எங்களை பேச விடுவதில்லை. விவசாயிகள் மற்றும் சாமானியர்கள் தொடர்பான முக்கிய பிரச்சினைகளை புறக்கணித்து விட்டு ஜின்னா உள்ளிட்ட பிரச்சினைகளில் அரசு மும்முரமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.