அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணான ஷிண்டே-பா.ஜ.க. அரசாங்கம் விரைவில் கவிழும்... ஆதித்யா தாக்கரே உறுதி
மகாராஷ்டிராவில் அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணான ஷிண்டே-பா.ஜ.க. கூட்டணி அரசாங்கம் விரைவில் கவிழும் என்று உத்தவ் தாக்கரே பிரிவு சிவ சேனாவின் இளம் தலைவர் ஆதித்யா தாக்கரே தெரிவித்தார்.
உத்தவ் தாக்கரே தலைமையிலான (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) சிவ சேனாவின் இளம் தலைவரும், உத்தவ் தாக்கரே மகனுமான ஆதித்யா தாக்கரே சிவ் சம்வத் யாத்திரை மேற்கொண்டுள்ளார். சிவ் சம்வத் யாத்திரையின் ஒரு பகுதியாக மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் உள்ள பத்னாபூரில் நடைபெற்ற கூட்டத்தில் ஆதித்யா தாக்கரே பேசுகையில் கூறியதாவது: மகாராஷ்டிரா மக்களுக்கு இந்த அரசு எப்படி நடத்தப்படுகிறது என்பது தெரியும்.
இந்த அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணான அரசாங்கம் அதிக நாட்கள் நீடிக்காது. அது விரைவில் கவிழும். பெரிய ஆளுமைகளை அவமதித்ததற்காக மாநிலத்தின் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை பதவி நீக்கம் செய்யுமாறு நான் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் கேட்டுக் கொண்டேன். கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி, பொது சின்னங்களையும் மகாராஷ்டிராவையும் அவமதித்துள்ளார், ஆனால் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மும்பையில் உள்ள வோர்லி சட்டப்பேரவை தொகுதி அல்லது தானேவில் என்னை எதிர்த்து போட்டியிட முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு சவால் விடுத்தேன்.
ஏக்நாத் ஷிண்டே-பா.ஜ.க. அரசு மக்களின் பணத்தை வீணடிக்கிறது. அவர்கள் (கிளர்ச்சி சிவ சேனா எம்.எல்.ஏ.க்கள்) மலை மற்றும் காட்டை பார்க்க (கடந்த ஆண்டு அசாமின் கவுகாத்தியில் கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருந்தனர்) பார்க்க சென்றனர். அவர்கள் (முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பலர்) டாவோஸ் (உலக பொருளாதார மன்றம்) சென்றனர். பனியை காண ரூ.40 கோடி செலவழித்துள்ளனர். வெறும் 28 மணி நேரத்தில் ரூ.40 கோடியை எப்படி செலவழிக்க முடிந்தது?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.