காமராஜர் பெயரில் தனிக்கட்சி.. காங்கிரஸ் தலைமைக்கு மூத்த நிர்வாகி எச்சரிக்கை

 
k

காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாட்டு விளம்பரத்தில்  மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் காமராஜர் புகைப்படம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.  இதற்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநிலச் செயலாளர் ஆர். எஸ். ராஜன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார் .

இந்த விவகாரம் குறித்து அவர் விடுத்திருக்கும் அறிக்கையில்,  தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்து 55 ஆண்டுகள் ஆகிவிட்டன.  இன்னும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வட மாநிலங்களோடு ஒப்பிடுகிகையில் துடிப்பாக இருப்பதற்கு காரணம் பெருந்தலைவர் காமராஜர்தான்.  

c

 காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக இருந்து இரு பிரதமர்களை அடையாளம் காட்டிய கிங் மேக்கர் அவர்.  இந்திரா காந்தியை முன்னிலைப்படுத்தி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு முகவரி கொடுத்தது காமராஜர்தான்.  திறந்த மனதோடு சொல்வதாக இருந்தால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கொஞ்சமாவது மக்கள் மத்தியில் மரியாதை இருக்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் அவர்தான். 

 தமிழக முதல்வராகவும் காங்கிரசின் அகில இந்திய தலைவராகவும் அவர் பணிகளை இந்த மடலில் எழுதி அனுப்பினால் கடிதத்தின் எடை மல்லிகார்ஜுன் கார்கே எடையை விட கூடலாம்.   அப்படிப்பட்ட மாமனிதரின் புகைப்படத்தை தவிர்த்து விட்டு காங்கிரஸ் தேசிய மாநாட்டிற்கு விளம்பரம் கொடுக்கப்பட்டிருக்கிறது கண்டனத்திற்கு உரியது. 

 காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று அவர் பெயரைச் சொல்லியே தமிழகத்தில் காங்கிரஸ் பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால் காமராஜர் புகழை தமிழக மக்களை விட காங்கிரஸ் அகில இந்திய தலைமைக்கு போதிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பது வேதனைக்குரிய விஷயம் . அகில இந்திய காங்கிரஸ் தலைமை காமராஜர் பெயரை இருட்டடிப்பு செய்ய முயலுமேயானால் தமிழகம் முழுவதும் இருக்கும் காமராஜர் மீது அன்பு கொண்டவர்கள் ஒன்று திரண்டு காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி காமராஜர் பெயரில் தனிக்கட்சியை தொடங்கவும் தயங்க மாட்டோம்  என்று எச்சரித்துள்ளார்.