சொத்து விவரங்கள் மறைப்பு.. லாலு பிரசாத் மகனுக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு

 
தேஜ் பிரதாப்

பீகாரில் சொத்து விவரங்களை மறைத்ததற்காக லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கு எதிராக போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ். கடந்த ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டப்பேரவை தேர்தலின்போது தேஜ் பிரதாப் யாதவ் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தனது சொத்து விவரங்களை மறைத்ததாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் சென்றது. இதனையடுத்து இது தொடர்பாக விசாரிக்கும்படி மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியது.

தேர்தல் ஆணையம்

மத்திய நேரடி வரிகள் வாரியம் நடத்திய விசாரணையில் தேஜ் பிரதாப் தவறான தகவல்களை கொடுத்தது தெரியவந்ததாக தகவல். இதன் தொடர்ச்சியாக பிராணப்பத்திரத்தில் தவறான தகவல் கொடுத்ததற்காக விளக்கம் கேட்டு தேஜ் பிரதாப்புக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. 3 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி தேஜ் பிரதாப்புக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

எப்.ஐ.ஆர்.

ஆனால் தேஜ் பிரதாப் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இதனையடுத்து சமஸ்திபூரின் ரோசெரா காவல் நிலையத்தில் தேஜ் பிரதாப்புக்கு எதிரா எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. அசையா சொத்துக்களை மறைத்ததற்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் பிரிவு 125 (ஏ)ன் கீழ் தேஜ் பிரதாப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தேஜ் பிரதாப் விவகாரம் தற்போது பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.