இவ்வளவு சுருட்டியிருக்காங்களே... இரட்டை இலைக்கு தடையா?

இவ்வளவு பெரிய தொகையை ஆட்சியில் இருந்த போது தான் அவர்கள் சுருட்டி இருக்கிறார்கள். மக்கள் வரிப்பணத்தை தான் அவர்கள் சுருட்டி இருக்கிறார்கள். இவர்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று கோரிய ஜோசப்பின் மனு மீது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற இருக்கிறது. இந்த விசாரணையில் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படுமா? என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது.
அதிமுகவின் முன்னாள் உறுப்பினரும் ஜெஜெ கட்சியின் நிறுவனருமானவர் ஜோசப். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனுவில் , ’’அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஐந்தாயிரம் கோடி ரூபாய் பண பட்டுவாடா செய்திருக்கிறார். வரும் 11ம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களின் ஆதரவை திரட்டுவதற்காக மேலும் ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்வதாகவும் செய்திகள் வெளி வருகின்றன.
இந்த செய்திகளை எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் எதிர்க்கவும் இல்லை மறுக்கவும் இல்லை. இவ்வளவு பெரிய தொகையும் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது சுருட்டியதாகத் தான் இருக்கும். மக்களின் வரிப்பணத்தை தான் அவர்கள் சுருட்டி இருக்கிறார்கள். ஓ. பன்னீர்செல்வத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே நடைபெறும் மோதலினால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து இந்த கட்சிக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கடந்த மாதம் 28ஆம் தேதி அன்று மனு அளித்து இருந்தேன்.
அந்த மனு மீது இதுவரைக்கும் எந்த பதிலும் இல்லை. இதனால் என் மனுவை பரிசீலனை செய்து அதிமுகவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி இருக்கிறார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முனீஸ்வரர் நாட் பண்டாரி, நீதிபதி என் மாலா ஆகியோர் அமர்வில் இன்று இந்த மனு விசாரணைக்கு வருகிறது. விசாரணையில் தேர்தல் ஆணையத்திற்கு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிடுவார்களோ? என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது.