உத்தர பிரதேசத்தில் கலவரங்களுக்கு இனி இடமில்லை... அதை மறந்து விடுங்க.. யோகி ஆதித்யநாத்

 
யோகி

உத்தர பிரதேசத்தில் கலவரங்களுக்கோ, அக்கிரமங்களுக்கோ, குண்டாயிசதற்கோ இனி இடமில்லை என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியாக தெரிவித்தார்.

மத்திய பிரதேசம் கார்கோனில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ராம நவமியை முன்னிட்டு நடைபெற்ற ஊர்வலத்தின் மீது  ஒரு குழுவினர்   கல் வீச்சு தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து கல் வீச்சு  சம்பவம் வன்முறையாக வெடித்தது. டெல்லியில் ஒரு பல்கலைக்கழகத்தில் ராம நவமியன்று அசைவ உணவு வழங்கப்பட்ட நிகழ்வு தொடர்பாக அந்த பல்கலைக்கழக வளாகத்தில் இரு மாணவர் குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்தது. மேலும், குஜராத்,  மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் ராவ நவமி தொடர்பாக சில மோதல்கள் எழுந்ததாக கூறப்படுகிறது.

கர்கோன் சம்பவம்

இந்த சூழ்நிலையில், நாட்டில் மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்தில் பல நூறு ராம நவமி ஊர்வலங்கள் நடந்தன. இருப்பினும் எந்தவொரு சச்சரவும் எழவில்லை. இது தொடர்பாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், உத்தர பிரதேசத்தில் கலவரத்தை மறந்து விடுங்கள் என எச்சரிக்கையாகவும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது என்பதை பெருமையாகவும்  தெரிவித்துள்ளார்.

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத் தான் பேசிய வீடியோ ஒன்றை டிவிட்டரில் வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் யோகி ஆதித்யநாத்,  சமீபத்தில் ராம நவமி கொண்டாடப்பட்டது. உத்தர பிரதேசத்தில் 25 கோடி மக்கள் வாழ்கின்றனர். மாநிலம் முழுவதும் 800 ராம நவமி ஊர்வலங்கள் நடந்தன. அதேநேரத்தில், இது ரம்ஜான் மாதம் மற்றும் பல ரோசா இப்தார் நிகழ்ச்சிகள் நடந்திருக்க வேண்டும். ஆனால் எந்தவொரு பகுதியிலும் சண்டை சச்சரவுகள் கூட இல்லை, கலவரத்தை மறந்து விடுங்கள். இது உத்தர பிரதேசத்தின் புதிய வளர்ச்சி செயல் திட்டத்தின் சின்னமாகும். கலவரங்களுக்கோ, அக்கிரமங்களுக்கோ, குண்டாயிசதற்கோ இனி இடமில்லை என தெரிவித்துள்ளார்.