ஜனநாயக வழியில் கேள்விகளை கேட்கலாம், ஆனால் அதை அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது அதிகம்... சமாஜ்வாடியை தாக்கிய யோகி

 
அகிலேஷ் யாதவ்

ஜனநாயக வழியில் கேள்விகளை கேட்கலாம். ஆனால் அதை அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது மிக அதிகம் என்று சமாஜ்வாடி கட்சியை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தாக்கினார்.


உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று உத்தர பிரதேச சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு, மக்கள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாடி கட்சியினர் அம்மாநில சட்டப்பேரவைக்கு பேரணியாக சென்றனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அகிலேஷ் யாதவின் பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

சமாஜ்வாடி

இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறுகையில், விவசாயிகளின் துயரம், சட்டம் ஒழுங்கு நிலைமை, விலைவாசி உயர்வு, சாலைகளின் நிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசை கடுமையாக சாடினார். மேலும், சட்டப்பேரவை வரை நடந்து சென்று, அங்கேயே அமர்ந்து  போராட்டத்தில் ஈடுபட விரும்பினேன், ஆனால் அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

யோகி ஆதித்யநாத்

சமாஜ்வாடி கட்சியினரின் பேரணி குறித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், அவர்கள் ஜனநாயக வழியில் கேள்விகளை கேட்கலாம். ஆனால் அதை அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது மிக அதிகம். எந்த கட்சியும் ஜனநாயக வழியில் தங்கள் கேள்விகளை கேட்டால் பாதிப்பு இல்லை,யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஊர்வலம் நடத்த சமாஜ்வாடி கட்சி அனுமதி பெற வேண்டும். சட்டம் ஒழுங்கை கடைப்பிடிப்பது என்பது சமாஜ்வாடி கட்சி தலைவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது மிக அதிகம் என தெரிவித்தார்.