ராகுல் காந்திக்கும், அகிலேஷ் யாதவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.. யோகி ஆதித்யநாத் கிண்டல் பேச்சு
ஒருவர் வெளிநாட்டில் தாய் நாட்டை விமர்சிப்பார், மற்றொரு உத்தர பிரதேசத்துக்கு வெளியே மாநிலத்தை தவறாக பேசுவார் அதனால் ராகுல் காந்திக்கும், அகிலேஷ் யாதவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என யோகி ஆதித்யநாத் கிண்டலாக தெரிவித்தார்.
உத்தர பிரதேச சட்டப்பேரவையில் கடந்த திங்கட்கிழமையன்று பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, சமாஜ்வாடி எம்.எல்.ஏ.வும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் பேசுகையில், உத்தர பிரதேசத்தின் கல்வியின் தரத்தை தரம் தாழ்த்தி பேசினார். நான் ஒரு பள்ளிக்கு சென்றபோது ஒரு குழந்தை என்னை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என குழப்பமடைந்தது என அவையில் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
இந்நிலையில் உத்தர பிரதேச சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தின்போது முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில் கூறியதாவது: குழந்தைகள் அப்பாவிகள். அகிலேஷ் யாதவ் குறிப்பிட்ட அந்த மாணவர் சற்று யோசித்த பிறகு இதை (அகிலேஷ் யாதவை ராகுல் காந்தி) சொல்லியிருக்க வேண்டும். இவர்களுக்கு (ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ்) இடையே பெரிய வித்தியாசம் இல்லை.
ஒருவர் வெளிநாட்டில் தாய் நாட்டை விமர்சிப்பார், மற்றொரு உத்தர பிரதேசத்துக்கு வெளியே மாநிலத்தை தவறாக பேசுவார். இவ்வாறு அவர் தெரிவித்தார். யோகி ஆதித்யநாத் இதை கூறியதும் அவையில் இருந்தவர்கள் அனைவரும் சிரித்தனர். அப்போது அகிலேஷ் யாதவும் அவையில் இருந்தார்.