காங்கிரஸை கலைக்க வேண்டும் என்ற காந்தியின் கனவை நனவாக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.. யோகி ஆதித்யநாத்

 
யோகி ஆதித்யநாத்

காங்கிரஸை கலைக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் கனவை நனவாக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று காங்கிரஸ் கட்சியை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

குஜராத் மாநிலம் போர்பந்தரில் பா.ஜ.க. வேட்பாளர் பாபுபாய் போக்கிரியாவை ஆதரித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் செய்தார். அப்போது யோகி ஆதித்யநாத் உரையாற்றுகையில் கூறியதாவது: காங்கிரஸை போல் அல்லாமல் பா.ஜ.க. எப்போதும் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறது. நெருக்கடிகளின் போது காங்கிரஸ் ஒரு போதும் மக்களுடன் நிற்காது. அதனால்தான்,  இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் கட்சியை கலைக்க வேண்டும் என்று பாபு (மகாத்மா காந்தி) பரிந்துரைத்திருந்தார். பாபுவின் (காங்கிரஸை கலைக்கும்) கனவை நனவாக்கும்  நேரம் வந்து விட்டது. உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ் 2 இடங்களில் மட்டுமே  வென்றது. ஒருவரின் சடலத்தை தூக்க நான்கு பேர் தேவை. ஆனால் அவர்களிடம் நான்கு பேர் கூட இல்லை. 

காங்கிரஸ்

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது, கட்சி ஆட்சியில் இருந்திருந்தால், சிகிச்சை மற்றும் தடுப்பூசிக்கான நிதியை காங்கிரஸ் அபகரித்திருக்கும். சகோதரன்-சகோதரி இருவரும் நெருக்கடி காலங்களில் இந்தியாவை விட்டு வெளியேறி, இத்தாலியில் உள்ள தாய்வழி தாத்தா பாட்டி வீட்டுக்கு செல்கிறார்கள். 2014ல் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் முன், ஊழல் ஆட்சியால் நாட்டில் அவநம்பிக்கை சூழல் நிலவியது. மக்கள் அரசியலை சந்தேகிக்க ஆரம்பித்து விட்டனர். இந்தியாவின் நற்பெயர் உலகில் அடிமட்டத்தை எட்டியது. தீவிரவாதம் மற்றும் நக்சலைட் சம்பவங்கள் தலைவிரித்தாடுகின்றன. அதிகார வெறி பிடித்த ஆட்சியை அகற்ற மக்கள் சாலைகளுக்கு வந்தபோது, நாட்டை வழிநடத்த மோடி குஜராத்தில் இருந்து வந்தார். 

மோடி
இந்தியாவை பாதுகாப்பதற்கு முன், மோடி குஜராத்தை பயங்கரவாத தாக்குதல்களில் இருந்தும், அடிக்கடி நடக்கும் வகுப்புவாத கலவரங்களிலிருந்தும் காப்பாற்றினார். ஒரு காலத்தில் இந்தியாவை ஆண்ட இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி, உலக அளவில் இந்திய பொருளாதாரததை ஐந்தாவது இடத்துக்கு பிரதமர் மோடி வழிநடத்தியுள்ளார். இன்று எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இந்தியாவுக்குள் நுழையத் துணியவில்லை. எந்தவொரு பயங்கரவாத சம்பவத்தையும் நடத்தத் துணியவில்லை. 370வது பிரிவு நீக்கம் என்பது பயங்கரவாதிகளின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.