உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க.வின் வெற்றியை கொண்டாடிய முஸ்லிம் இளைஞர் கொலை.. முதல்வர் யோகி விசாரணைக்கு உத்தரவு

 
யோகி

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க.வின் வெற்றியை கொண்டாடிய ஒரு முஸ்லிம் இளைஞரை பக்கத்து வீட்டுக்காரர்கள் அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

முஸ்லிம் இளைஞர் கொலை தொடர்பாக போலீசார் கூறியதாவது: உத்தர பிரதேசம் மாநிலம் குஷிநகர் மாவட்டம் கதர்காரி கிராமத்தை சேர்ந்தவர் 25 வயதான பாபர் அலி.  முஸ்லிம் மதத்தை சேர்ந்த பாபர் அலி அண்மையில் நடந்து முடிந்த அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தீவிரமாக பிரச்சாரம் செய்தார். தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதையடுத்து அதனை பாபர் அலி கொண்டாடி உள்ளார். 

பா.ஜ.க.

இந்நிலையில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததற்காகவும், பா.ஜ.க.வின் வெற்றியை கொண்டாடியதற்காகவும், கடந்த 20ம் தேதியன்று பாபர் அலியை  அவரது பக்கத்து வீட்டுக்காரர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த பாபர் அலி லக்னோவில்  உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சையின்போதே பாபர் அலி இறந்தார். இவ்வாறு போலீஸ் தெரிவித்தது.

உத்தர பிரதேச போலீஸ்

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க.வை ஊக்குவிப்பதாக குஷிநகரில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டது சம்பவம் குறித்து விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும், இறந்த பாபர் அலியின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.