நான் ஒரு அரசியல் கட்சிக்காக மட்டும் போராடவில்லை, அரசாங்கத்துக்காக போராடுகிறேன்.. யஷ்வந்த் சின்ஹா

 
யஷ்வந்த் சின்ஹா

நான் ஒரு அரசியல் கட்சிக்காக மட்டும் போராடவில்லை, அரசாங்கத்துக்காக போராடுகிறேன் என எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.
 
சிவ சேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே கடந்த சில தினங்களுக்கு முன் குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக சிவ சேனா எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பெரும்பாலான எம்.பி.க்கள் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேவிடம் தங்களது கருத்தை தெரிவித்தனர். இதன் பிறகு, குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவை சிவ சேனா ஆதரிக்கும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

திரௌபதி முர்மு

இது தொடர்பாக உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசியலுக்கு அப்பாற்பட்டு, குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவை எனது சிவ சேனா ஆதரிக்கும். சிவ சேனா எம்.பி.க்கள் கூட்டத்தில் யாரும் என்னை வற்புறுத்தவில்லை.  2007 மற்றும் 2012ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களான பிரதீபா பாட்டீல் மற்றும் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு  தேசிய ஜனநாயக  கூட்டணியில் இருந்த சிவ சேனா எப்படி ஆதரவளித்தது. அந்த நேரத்திலும் சிவ சேனா அரசியலுக்கு அப்பாற்பட்டு, நாட்டுக்கு நல்லதை செய்தது என தெரிவித்தார்.

சிவ சேனா

எதிர்வரும் குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு உத்தவ் தாக்கரே பிரிவு சிவ சேனா ஆதரவு அளித்து இருப்பது குறித்து குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா கூறுகையில், நான் ஒரு அரசியல் கட்சிக்காக மட்டும் போராடவில்லை, அரசாங்கத்துக்காக போராடுகிறேன், கடைசியில் பூனை பையில் இருந்து வெளியேறியது. சிவ சேனா கட்டாயப்படுத்தப்பட்டது. உத்தவ் தாக்கரே அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை (திரௌபதி முர்மு) ஆதரிப்பதாக அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என தெரிவித்தார்.